இவ்வுரையாடல் x-group என்னும் தளத்தில் சிறுவர் இராணுவம் என்னும் பதிவில் இடம்பெற்றது.
If I do not forgive my enemy, he has power over me.
If I cannot forgive, we cannot move forrward.
My enemy and I both need forgiveness and both need to change.
'சிறுவர் ராணுவம்' என்னும் கருத்தியல் என்பது முற்றுமுழுதாக மேற்கின் சமூக ஓட்ட அனுபவத்தின் வெளிப்பாடு எனக்கூற முடியும். மேற்கு வெறுப்பாளர்கள் போல் இக்கருத்தியலை முழுமையாக நிராகரிக்கும் எண்ணம் எமக்கு எப்போதும் இருந்ததில்லை. நாம் அவ்வகையான கருத்தியலை எமக்கான தளமாகக் கட்டமைத்ததும் இல்லை. இன்று மூன்றாமுலக நாடுகளில் நடைபெறும் போராட்டங்கள் பல சிறுவர் ராணுவங்களையும் மனித உரிமை மீறல்களையும் காட்டி கேள்விக்குட்படுத்தப்படுகின்றன. அதே வேளையில் மேற்குலகின் வர்த்தக நலன் பொருந்திய அரசாங்ககளின் மேலாதிக்கம் காரணமாக உள்நாட்டுத் தேசிய சக்திகளால் அக்கருத்தியல் முழுமையாக நிராகரிக்கப்படுவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.
நாம் எப்போதும் இருவகைப்பட்ட கருத்தியல் போக்குகளுக்கு இடையில் அவற்றின் சாதக நிலமைகளை ஆராய்ந்தவாறு எமது கருத்தியலை அதன் நிலையாமை அம்சத்துடன் கட்டமைத்து வருவது புதிய விடயம் அல்ல. மார்க்சியர்களது போதாமையுடன் ஒரேயடியாக மேற்கின் வலதுசாரியத்துக்குள்ளும் சமூகத்தின் பாதகமான அம்சங்களுடனான தாராளவாதத்திற்குள்ளும் மூழ்கிக்கிடப்பவர்களுக்கு எம்மிடம் செய்திகள் இல்லை. அவர்கள் பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களையோ அல்லது அவர்களது துயரத்தையோ எப்போதும் விளங்கிக் கொள்ளப் போவதில்லை. அதேநேரம் தொழிலாளி வர்க்கத்தின் உள்ளார்ந்த துயரங்களையோ அல்லது அவர்களது பொருளாதார மீட்சியையோ கிஞ்சித்தும் உணர்ந்து கொள்ளாமல் மார்க்சிய பானத்தை அருந்திப் போதையேறிக் கிடக்கும் நடுத்தரவர்க்க மார்க்சிய வெறியர்களுக்கும் எம்மிடம் எடுத்துக் கொள்ள எதுவித கருத்துக்களும் இல்லை. ஒடுக்கப்பட்ட மக்களது கருத்தியலை வாழ வைக்கிறோம் பேர்வழி என்று மேடைகளில் அவர்கள் வாழவைப்பதை எங்களுக்கு முன்னரே பல தலைமுறைகள் பார்த்தாகிவிட்டது. சிறுவர் ராணுவம் என்னும் கருத்தியல் பலராலும் பல புள்ளிகளில் இருந்து நோக்கப்பட்டு பல விதங்களில் வாதாடப்படலாம். இதற்காகவே இவ்விடயத்தைச் சொல்ல வேண்டி இருந்தது.
தற்போதைய 'சிறுவர் ராணுவம்' பற்றிப் பார்ப்பதற்கு முன்னர் நாம் சமூகக்கட்டமைப்புக்களது தோற்றம் வளர்ச்சி பற்றிப் பார்ப்பது அவசியமானது. மனிதனது ஆரம்பகாலங்களையும் சமூகக்குழுக்களது வளர்ச்சியையும் நாம் இவ்விடத்தில் பார்க்க வேண்டியது அவசியமானது. உணவுத்தேவையைப் பூர்த்தி செய்வதை மட்டும் நொக்கமாகக் சமூகக்குழுக்களில் சிறுவர் ராணிவத்தினர் இருந்தே வந்திருக்கின்றார்கள். அங்கே சிறுவர் ராணுவம் என்ற பதம் பாதிக்கபடவில்லை. அவர்களது உணவுத்தேவை பூர்த்தி செய்யப்படுவதற்குமப்பால் தமது குழுவைப் பாதுகாத்துக் கொள்வதற்கு அவர்களுக்கு ஆயுதங்களும் வன்முறையும் தேவைப்பட்டிருக்கின்றது. சிறிய சமூகக்குழுக்களின் இருப்பிற்கு வன்முறை தேவைப்பட்ட போது அங்கே சிறுவர்கள் பாவிக்கப்பட்டே வந்திருக்கின்றனர். இங்கே, பொருளாதார அடிப்படையிலான வர்க்கப் போக்குக் காணப்படவில்லை. அதன் பின்பு பொருளாதார அடிப்படையிலான சமூகப் போக்கு நிகழத் தொடங்கியது. அங்கே, பலம்பெற்றவர்கள் மேலும் பலம் பெறவும் தமது அதிகாரத்தைக் தக்க வைப்பதற்கு வன்முறையைப் பிரயோகித்தார்கள். அவர்களது தேவையை தீர்த்து வைப்பதற்கு வயதெல்லை பார்க்கப்படவில்லை.
இப்போக்கு காலனித்துவ எதிர்ப்புப் போராட்ட காலங்கள் வரை நீடித்தே உள்ளது. பிரிட்டனிடம் இருந்து அமெரிக்கா சுதந்திரம் பெற்ற போது கூட சிறுவர் ராணுவம் பயன்படுத்தப்பட்டே வந்திருக்கின்றது. இன்றுவரை மேற்குல நாடுகள் 16 வயதிற்குப் பின்னரே ராணுவப்பயிற்சியை வழங்கத் தொடங்கிவிடுகின்றன. (18 வயதிற்குப் பின்னர் போரில் ஈடுபடுத்தினாலும் 16 வயதிலேயே ராணுவப்பயிற்சி தொடங்கி விடுகின்றது.) ஒடுக்கப்படும் சமூகங்களைப் பொறுத்தவரை தாய் தந்தையரை அரச இயந்திர வன்முறைக்கு இழந்தவர்கள் இயல்பாகவே போராளிக்குழுக்களுடன் வேறு போக்கிடம் இல்லாமலும் பழிவாங்கும் உணர்வுடனும் வன்முறைக் குழுக்களுடம் சேர்ந்து கொள்கின்றனர். இன்னொரு பக்கத்தில் போராளிக்குழுக்களால் பலாத்தகாரமாக இணைத்துக் கொள்ளப்படுதல் என்னும் செயற்பாடு. இம்மூன்று விடயங்களுக்குள் வைத்து சிறுவர் ராணுவம் பற்றி உரையாட முடியும்.
முதலாம் இரண்டாம் உலக மகாயுத்தத்தில் சிறுவர் ராணுவம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. அதன் பின்பும் காலனியாதிக்கத்திற்கு எதிரான போர்களிலும் சிறுவர் ராணுவம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. அவ்வாறே சோசலிசப் புரட்சிகளின் போதும் சிறுவர் ராணுவம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. தேசம் அல்லது நாடு என்ற வரைமுறைகளுக்குட்பட்ட பரப்புகள் சிறுவர் போராளிகளைப் பயன்படுத்தாமல் இருப்பதற்கான காரணம் வேறு. அதே நேரம் தமது இருப்பே கேள்விக்குறியாகும் போது முழுச்சமூகமுமே அதற்கெதிராகப் போராடும் போது சிறுவர் ராணுவம் என்ற கருத்துத் தகர்ந்து போகின்றது. அங்கே தனியே உடல்கள் வெறும் இருப்பிற்கான ஆயுதங்களாக மாறிப்போகின்றன. பாலஸ்தீனத்திற்குச் சென்று கல்லெறியும் சிறுவனிடம் கல்லெறியாதே என்ற உபதேசத்தைக் கூறும் தைரியம் நமது முன்னாள் குழந்தைப் போராளியும் இந்நாள் ஜனநாயகவாதியுமான நண்பர்களிடம் மட்டுமே உண்டு. இரு அரசுகளுக்கிடையிலான போர்கள் வெவ்வேறு காரணங்களுக்கானவை. அங்கே இராணுவ அமைப்பு என்பதே மக்களுக்கு அவசியமானதாகவோ அல்லது கட்டாயமானதாகவோ இருக்கும் என்ற அவசியமுமில்லை. ஆனால், மக்கள் போராட்டம் இடம்பெறும் தருணங்களில் வயதெல்லைகள் மீறப்படுவதை நாம் வரலாறு நெடுகிலும் பார்த்தே வந்திருக்கின்றோம். இவ்விடயத்தை இவ்விடத்தில் நிறுத்துகின்றேன்.
இவ்விடத்தில் தமிழ்ச்சூழலில் சிறுவர் போராளிகள் பற்றி இருக்கும் மூன்று பக்கசர்பான வாதங்களையும் நாம் பார்த்துவிடுதல் முக்கியமானது.
1.
புலியெதிர்ப்பு அரசியல் செய்பவர்கள் சிறுவர் ராணுவம் என்ற கருத்தியலை முன்னிறுத்துகின்றார்கள். சிறுவர் ராணுவம் என்பத்ற்குப் பின்னால் உள்ள ஒரு பக்கத்தை மட்டும் தமது அரசியலுக்கு ஏற்றபடி எடுத்துக் கொள்கின்றார்கள். அதையே தீவிரமாக வலியுறுத்தவும் செய்கின்றார்கள். ஐக்கிய நாடுகள் சொல்லும் அதே வசனங்களையும் கருத்தியலையும் கிளிப்பிள்ளை போன்று பின்பற்றுகின்றார்கள். மனித உரிமைகள் பற்றிய கருத்தியல்களின் கீழ் இவர்களது கருத்தியல் வலுப்பெறுகின்றது.
2.
புலி ஆதரவுக்கருத்தாளர்கள் கண்மூடித்தனமாக தேசவிடுதலையின் பெயரால் சிறுவர் ராணுவம் என்பதன் பாதகநிலை பற்றிய எதுவித பிரக்ஞையுமற்று ஆதரிக்கின்றார்கள். இவர்களில் பெரும்பாலானோர் தமது பிள்ளைகளை மிகுந்த பணச்செலவுகளுடம் கல்வி கற்க வைக்கின்றார்கள். அவர்களது பிள்ளைகள் குழந்தைப் போராளியானால் அதை விரும்பாத குழுவினர் இவ்வகைக்குள் வருகின்றார்கள்.
3.
மூன்றாவதாக நடைமுறை பற்றிய எதுவித தெளிவுகளுமற்ற நடுநிலமையை கருத்தியலில் வலியுறுத்தியவாறு நடைமுறையை விட்டு விலக்கி கருத்தியலை அன்னியமாக்கி கற்பனைவாதம் பேசுவோர். இவர்கள் இருதரப்பையும் எதிர்பதாகக் கூறிச் சுலபமாக கருத்தியல் கோட்டையக் கட்டிக் கொண்டிருப்பார்கள். இவ்வகைக்குள் ஒன்றுக்கொன்று முரண்பட்ட பல தரப்பினர் வருவார்கள். அவர்கள் பல பெயர்களால் அழைக்கப்படுவார்கள். சில சிவப்பு நிற உள்ளாடை அணிவார்கள். சிலர் கறுப்பு நிற மேலாடை அணிவார்கள். அவர்களது நோக்கம் கருத்தியல் ரீதியாக தம்மை யாரும் தாக்கிவிடாத பிரதிகளை ஏற்படுத்துவது மட்டுமே. நடைமுறை பற்றி எதுவித பிரக்ஞையுமற்று வெறும் கற்பனைத்தளத்தில் இய்ங்குபவர்கள்.
உதாரணமாக - மேற்குலகு தனது பொருளாதார நலன்களை வலுப்படுத்துவத்ற்கு மட்டுமே சிறுவர் ராணுவம் என்ற கருத்தியலைப் பயன்படுத்துகின்றது என்றும் மேற்குலகினது கருத்தியலை முற்றுமுழுதாக எதிர்க்க வேண்டும் என்றும் அடிக்கடி கூறிக்கொண்டிருப்போர்.
இங்கே மேற்கூறிய சிறுவர் ராணுவம் என்ற கருத்தை விட மேற்கூறிய மூன்று தரப்பினருக்கும் அவரவர் அரசியலே முக்கியமாகின்றது. நாம் தெளிவாகக்கீறிய அரசியல் வெளிகளுக்குள் நின்று மாத்திரம் இவ்விடயத்தைப் பார்த்துவிட முடியாது. தனியான தத்துவ ரீதியான பார்வைகளோ அல்லது தனியே மனித உரிமைகளை மையமா வைத்து அணுகும் பார்வைகளோ அல்லது தனியே அனைத்தையும் பொருளாதார அடிப்படையில் வைத்து அணுகும் பார்வைகளோ இவ்வுலகின் போக்கை உணர்ந்து கொள்ள நமக்கு உதவப்போவதில்லை. பலதளங்களிலும் பல்வேறு கோணங்களிலுமான பன்முகப்பார்வையே எமக்கு இக்காலத்தில் மிக முக்கியமானது. அதுவே எமக்கு இயக்கத்தைச் சாத்தியப்படுத்த உதவும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இங்கே, நாம் மீண்டும் முன்னர் கூறிய விடயத்திற்குப் போகின்றோம். சிறுவர் ராணுவங்கள் எங்கே உருவாகின்றனர் அல்லது எங்கே உருவாக்கப்படுகின்றனர். நான் முன்னரே கூறியது போன்று சிறுவர் ராணுவங்களை மூன்று வகையாகப் பிரித்துப் பார்க்க முடியும்.
1.
முறையான அரச இயந்திரத்தின் அங்கமான ராணுவ அமைப்பு. இந்நிலையை முன்வைத்தே ஐக்கிய நாடுகள் சபையினது பிரகடனங்களுக்கான ஆரம்பப்புள்ளி தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றது. இவ்விடத்தில் மனித உரிமைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த சிறுவர் உரிமைகள் தொடர்பான விடயங்களை இணைத்துப் பார்க்க முடியும். தனது வாழ்க்கையின் போக்கைத் திர்மானிப்பதற்கான முடிவை எடுக்க முடியாத வயதென்ற கருத்தும் அதற்கான ஆரம்பத் தயார்ப்படுத்தல்களுக்கான கருத்தும் இவ்விடத்தில் முக்கியமாகவே படுகின்றன. இவ்விடத்தில் ஐக்கிய நாடுகள் சபையினது பிரகடனத்தின் தேவையௌம் சாதகநிலையையும் பற்றி நாம் நிசயமாகப் பேசியே ஆகவேண்டும்.
2.
போராளிக்குழுக்களுடன் தாம் விரும்பி இணைந்து கொள்வோர். இவ்விடத்தில் இவ்வகைக்குள் அடங்குவோரைப் பலவிதமாகப் பார்க்க முடியும். ஆயினும் முக்கியமாக இரண்டுவிதமாகப் பார்க்க முடியும்.
அ) வேறு போக்கிடமற்றதும் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைக் கொண்டதுமான பார்வை. அதுமட்டுமல்லாது தான் சார்ந்த சமூகக்குழு ஒன்றுக்கான போராட்டத்தில் வயதெல்லைகள் தாண்டிய போராட்ட உணர்வு. இதனை நாம் பல இடங்களிலும் பார்க்க முடியும்.
ஆ) அடிப்படைவாதக் கருத்தியல்களால் உந்திவிடப்பட்ட சமூகத்தில் இருந்து தோன்றும் சிறுவர் போராளிகள் பற்றிய பார்வை. இங்கே கருத்தியல்கள் அவர்களது சுய விருப்பதைத் தீர்மானிக்கின்றன. மத, இன, தேசியக் கருத்தியல்கள் தமக்கான சாதக வெளிகளைக் கடந்து வன்மத்தை உற்பத்தி செய்யும் போது நாம் இவ்வகையான நிலைகளைக் காண முடியும். வன்முறை ஊக்குவிப்புச் சமூகத்தை மட்டுமே விளைவாக்ககூடிய இவ்வகையான சுயவிருப்பு சிறுவர் போராளிகள் தொடர்பாகவும் நமக்கு மிகுந்த கவனம் தேவை எனவே நினைக்கின்றேன்.
3.
போராளிக்குழுக்களால் பலாத்தகாரமாக இணைக்கப்படும் சிறுவர்கள். சிறுவர்களது சிறுபிராயம் தொலைவது மட்டுமல்லாது சமூகத்தைப் பற்றிய பார்வையையே இது மாற்றிவிடுகின்றது.
சிறுவர் ராணுவம் என்பது முற்றுமுழுதாக கண்மூடித்தனமாக எதிர்க்கப்பட வேண்டியது என்ற கருத்தியல் எமக்குப் போதிக்கப்பட்டுள்ளது. அதன் வயதெல்லையும் வரையறுக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து மட்டும் அல்லது அதன் முழுமையான எதிர்ப்பில் இருந்து மட்டுமே எமது சிந்தனைகள் உருவாகின்றன என்பதே சோகம். இது சாதாரண வாசகர்களுக்கானதல்ல தமிழ்ச்சுழலில் இயங்கும் அறிவுஜீவிகள் எனக்கூறப்படுவோருக்கும் பொருந்தக்கூடியது. குறித்த சம்பவத்திற்கு குறித்த நபர் எவ்வாறு கட்டுரை எழுத்துவார் என்பது இன்று பல இளையோருக்கு முன்னரே தெரிந்து விடுகின்றது.
இவ்விடத்தில் ஒரு விடயம் கட்டாயம் கூறப்படவேண்டும். சிறுவர் பாலியல் இற்கும் சிறுவர் பாலியல் விபச்சாரம் என்பதற்கும் என்ன வித்தியாசம்? மேற்கு நாடுகளில் 15 வயது ஆணுடனோ அல்லது பெண்ணுடனோ 21 வயது ஆணோ பெண்ணோ உறவு வைத்திருப்பின் பாரதூரமான குற்றமாக கரும் மனநிலை ஏன் 12 வயது ஆணோ பெண்ணோ அதே வயது ஆணோ பெண்ணுடனோ உறவு வைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள விழைகின்றது? சிறுவர்களுக்கிடையிலான பாலியல் தேவை என்பது அவரவர் வயதினருடன் பகிரப்படக்கூடியது என்ற கருத்தை இன்றைய உளவியலாளர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். அது மட்டுமல்லாது ஒருவரது ஆரோக்கியமான பாலியல் வளர்ச்சிக்கு அவர்களது ஒத்த வயதினருடனான உரையாடலோ அல்லது சிலவிதமான வெளிப்பாடுகளோ ஆரோக்கியமான பாலியல் வளர்ச்சிக்கு உகந்தவை என்ற கருத்தும் வலுப்பட்டே வருகின்றது.
இவ்விடத்தில் சிறுவர் விபச்சாரம் என்ற கருத்து அதில் இருந்து மாறுபட்டுள்ளது. அது மாற்றுக்கருத்துக்கு இடமின்றி கண்ட்க்கப்படுகின்றது. இவ்விடத்தில் நாம் மீண்டும் சிறுவர் ராணுவம் என்ற கருத்தை சிறுவர் பாலியல் அல்லது சிறுவர் விபச்சாரம் என்ற கருத்துக்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் சில விடைகள் தானாகவே கிடைத்துவிடும். அவ்விடைகள் மேற்கின் கருத்தியல் எவ்விடங்களில் மீறப்பட வேண்டும் என்ற தெளிவுக்கு வர உதவும். மேற்கு வெறுப்பாளர்களுக்கும் மேற்கு ஆதரவாளர்களுக்கும் இச்செய்தி அவசியமென்பதே எமது நிலைப்பாடு. இவ்விடத்தில் நாம் தீர்வெதனையும் கூறவரவில்லை. எமது நிலைப்பாடு எதுவாக இருக்கிறதென்ற உங்களது வினாவே சிந்தனையின் பிறப்பிடமாக இருக்கும்.
2 - (அ) என்ற பகுதியில் நாம் கவனம் கொள்வதாக நினைப்போர் Innocent Voices என்ற அற்புதமான திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றோம்.
http://www.youtube.com/watch?v=fb-uFc62Gx4
மேலதிகமாக வாசிக்க விரும்புவோருக்கானது.
http://philosophy.rutgers.edu/FACSTAFF/BIOS/PAPERS/MCMAHAN/ChildSoldiers.pdf.
நமது ஏற்கனவேயான உரையாடல்களின் சில பகுதிகளைக் கீழே தருகின்றோம்.
1.
/சிறுவர்களின் கைகளில் பலவந்தமாகத் திணிக்கப்படும் ஆயுதங்களின் கனத்தில், சிறுவர்கள் எழுப்பிடும் ஓலம் யாராலும் இலகுவாக நிராகரிக்கப்பட முடியாதது. சிறுவர் ராணுவம் தொடர்பிலும் சிறுவர் நலன் தொடர்பிலும் சிறீலங்கா அரசைக் குற்றம் சாட்டுவதை விடுத்து, நாம் செல்வதற்கான மிக நீண்ட பாதையை பற்றி யோசித்து பார்த்தல் எமது சமூகத்தின் தேவைப்பாடாக உள்ளது. மற்றவர்களின் குற்றத்திரையில் நாம் எம்மை மறைத்துவிடுதல் என்பது எமக்கான தேவைப்பாடுகளை மறுதலிக்கும் செயலாகும். இதன் மூலம் நாம் எவ்வகையிலும் முன்னேற்றகட்டத்திற்கு எம்மையோ எமது சமூகத்தையோ நகர்த்திவிட முடியாது என்பதே உண்மையாகும். அது தொடர்பான விவாதங்கள் மூலம் எமக்கு தேவையான விடயங்களை நாம் தெளிவுபடுத்திக் கொள்ளுதலே எமக்கு உகந்தது என நான் நினைக்கின்றேன். அத்துடன்,
கீழே உள்ள சில குரல்களைக் கேளுங்கள். வன்முறையை மூலதனமாகக் கொண்டியங்கும் சமூகத்தால் எப்போதுமே உண்மையான விடுதலையச் சாத்தியப்படுத்திவிட முடியாது. சமூகம் ராணுவ ரீதியாக விடுதலையப் பெற்றுக்கொண்டாலும் சமூகத்தின் ஒவ்வொரு கூறுகளையும் விடுதலைப்பாதைக்கு இட்டுச்செல்ல மிகவும் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது. கட்டாய சிறுவர் ராணுவத்தைக் கொண்டுள்ள சமூகம் விடுதலைக்கு நெடுந்தூரம் நடக்க வேண்டியுள்ளது./
2.
/சிறுவர் ராணுவம் என்பதன் கருத்துப்போக்கையும் ஆராய்வதே முக்கியமானதாகும். வன்முறை சமூகத்தின் கூறுகளாகி அல்லல்படும் சிறுவர்களின் முதன்மைத் தெரிவாக வன்முறையே இருப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. மற்றும் பல்வேறு காரணங்களால் அநாதைகளாக்கப்பட்ட சிறுவர்கள், இழப்பின் வேதனையில் தம்மைப் போராளிக்குழுக்களுடன் இணைத்துக் கொள்ளுதலின் உளவியல் என்பது ஆராயப்பட வேண்டியது. அவர்களின் முதன்மைத் தெரிவாக அது அமைந்துவிடுதல் என்பது சாதாரணமானதே. அதில் அவர்கள் அடையும் தற்காலிக ஆறுதல், அவர்களை தாம் சமூகத்தின் பிரதிநிதி என சிந்திக்க தூண்டுகின்றது. இணைவின் மூலம் தமது இழப்பை அவர்கள் மீளப்பெற்றுக்கொள்கின்றார்கள். இதில் நாம் பார்க்கவேண்டிய விடயம் என்னவென்றால் ராணுவக்குழுக்கள் சிறுவர்களைப் பயன்படுத்தும் முறைமை மற்றும் ராணுவக்குழுக்களிடம் சிறுவர் உரிமையின் பாலுள்ள கரிசனை. அதைவிடுத்து தனியே சிறுவர் ராணுவம் பற்றி நாம் பேசுதல் என்பது வீணானதே./
3.
/சிறுவர் உரிமை தொடர்பாக சிறீலங்கா அரசாங்கத்திடம் இருக்கும் கரிசனை உலகமே அறிந்தது. வீழ்ந்து கொண்டிருக்கும் பொருளாதாரத்தை கட்டிக்காப்பதற்காக, உல்லாச பிரயாணிகளின் வருகையை அதிகரிக்கும் தேவை சிறீலங்கா அரசாங்கத்துக்கு உள்ளது. அதன் மூலமே அது பெருமளவான வெளிநாட்டுச் செலவாணியைப் பெற்றுக் கொள்கின்றது. அதற்கான தனது நாட்டில் மறைமுகமான சிறுவர் பாலியலை ஊக்குவிக்கின்றது. சிறுவர் தொடர்பான கரிசனையையும் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் அது முன்னெடுப்பதில்லை. அதன் ஒரு விளைவே சிறுவர் ராணுவம் என்னும் பிரச்சனை. ஆனால், சிறுவர் ராணுவம் தொடர்பில் பரந்தளவிலான பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றது புலிகளுக்கு எதிராக. அத்ன இதய சுத்தியும், சமூக அபிவிருத்திச் சுட்டியும் இதற்கு சமாந்தரமாக வைத்து நோக்கப்படவேண்டும் என்பதே எனது கருத்து.
சிறுவர் உரிமை எனும் கோசத்தை முன்வைத்து பிழைப்பு நடத்தும் கூட்டத்திலிருந்து மாறுபட்டு சிறுவர் உரிமை தொடபாக பேசவேண்டும் என்பதே எனது விருப்பம. இது தொடர்பான விரிவான விவாதங்கள் நடத்தப்பட வேண்டும்./
பின்குறிப்பு: 1
"The army was a nightmare. We suffered greatly from the cruel treatment we received. We were constantly beaten, mostly for no reason at all, just to keep us in a state of terror. I still have a scar on my lip and sharp pains in my stomach from being brutally kicked by the older soldiers. The food was scarce, and they made us walk with heavy loads, much too heavy for our small and malnourished bodies. They forced me to learn how to fight the enemy, in a war that I didn't understand why was being fought."
- Emilio, recruited by the Guatemalan army at age 14-
பின்குறிப்பு: 2
கொலையுண்டு போன
என் புதல்வர்களின்
முற்றாப் பிஞ்சுடலின் ஊனருந்தி
தன் கோரப்பசியாற்றி
தாகம் தீரச் செந்நீரும் குடித்தபின்
இன்னுமா "தாய் நிலம்"
புதல்வர்களைக் கேட்கிறது?
போராட என்னை அழைக்காதே
நானொரு தாய்
எனது புதல்வர்களையும் கேட்காதே
இரக்கமற்ற 'தாய்நிலமே'
கொல்லப்பட்ட என் புதல்வர்களின் இரத்தம்
இன்னமும் காயவில்லை.
கடித்துக் குதறி
நெரித்தும் எரித்தும்
வடக்கிலும் தெற்கிலும்
உலகெங்கிலுமாக
எத்தனை குஞ்சுகளை விழுங்கிவிட்டாய்.
இன்னும் அடங்காதோ உன் பசி?
விண்ணேறி மண் தொட்டு
மீண்ட பின்னும்
சமாதானம் வேண்ட
யுத்தம் தேவையோ?
பற்றி எரிக ஆயுத கலாசாரம்!
என் மழலைகளை விடு
நாளைய உலகம்
அவர்களுக்காய் மலரட்டும்!
-ஒளவை விக்னேஸ்வரன்-
Friday, March 13, 2009
உரையாடல் - 4 (x-group, சுதன், சேகர்) - [[மீள்வாசிப்பு]]
Posted by Unidentified Space at 1:14 PM 0 comments
Subscribe to:
Posts (Atom)