இவ்வுரையாடல் x-group என்னும் தளத்தில் பெண் குழந்தைகளை முத்தமிடுவதில் எல்லை தேவையா? என்னும் பதிவில் இடம்பெற்றது.
வெகுஜனப் பத்திரிகை ஒன்றில் வெளிவந்திருந்த சாதாரணமான கட்டுரை ஒன்றை முன்வைத்து தத்துவார்த்த ரீதியிலான உரையாடல் ஒன்றைச் சாத்தியப்படுத்தும் நோக்கிலே இவ்வுரையாடல் நிகழ்த்தப்பட்டது. 'பெண்குழந்தைகளை முத்தமிடுவது தொடர்பான' சாதாரண மக்கள் நிலைப்பாட்டை அதன் உளவியல் தளத்தில் அணுகும் நோக்கமே இங்கே முக்கியத்துவம்பெற்றது.
சமூகத்தின் பால் ரீதியான உளவியல் பிளவுநிலைகள் குடும்ப உறவுகளிலும் பெருமளவான தாக்கத்தைச் செலுத்துகின்றன. கட்டமைக்கப்பட்ட பால் பிளவு உருவாக்கும் மனநிலையே சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் பெருமளவு ஆதிக்கம் செலுத்துகின்றது. ஒருவகையில் சமூகத்தை இயக்குகின்றது எனவும் கூறலாம். துவித எதிர் இருமைக்குள் அகப்பட்ட பால் தெரிவுகள் இன்று அதைத்தாண்ட முயற்சிப்பதை நாம் அவதானித்தவாறே இருக்கின்றோம். மேற்கில் இதுதொடர்பான உரையாடல்கள் அதிகளவில் இடம்பெறுவதை எம்மில் பலர் அறிவதில்லை. சமூகவியல் தளத்தில் இதன் தேவைப்பாடுகளும் உரையாடல்களும் உச்சநிலையை அடைந்ததை அடுத்து அதன் உயிரியல் நிலைப்பாடுகளும் சாத்தியங்களும் பல்வேறுவகைப்பட்ட புலமையாளர்களால் விவாதிக்கப்பட்டு வருகின்றது. அரசியல் ரீதியாகவும் அவை முக்கியத்துவம்பெற்றுவருவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
சிக்மன் பிராய்டின் உளவியல் பகுப்பாய்வு புதிய வெளியொன்றைத் திறந்துவிட்டதோடு உளவியல் பகுப்பாய்வுத் துறையை முக்கியத்துவம்பெற்ற தனித்துறையாக மாற்றிவிட்டது. அதன் பின்பு சிக்மன் பிராய்டின் மாணவரான யூங் அவர்களால் சிக்மன் பிராய்டின் உளவியல் பகுப்பாய்வு முறை தனியே பாலியலை மையமாக வைத்தது என்று கூறப்பட்டு நிராகரிக்கப்பட்டது. (பிராய்டின் பாலியல் மைய உளவியல் பகுப்பாய்வு முறைக்கு பல்வேறு காரணங்களை ஆய்வாளர்கள் முன்வைக்கின்றார்கள். விக்டோரியல் காலத்தைய ஆணாதிக்கம் சார் கருத்து நிலையும் பாலியல் இன்பம் என்பதைத் தவறாகக் கருதும் போக்கும் முக்கியமான காரணமாகக் கூறப்படுகின்றது. அத்துடன் சிகமன் பிராய்ட் சிறுவயதில் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு ஆளாகியிருந்தார் என ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். அந்த அடிப்படையில் பிராய்டின் பாலியல் மைய உளப்பகுப்பாய்வு முறை தோற்றம் பெற்றதாகவும் கூறப்படுகின்றது. அவர் தனது உளப்பகுப்பாய்வின் அடிநாதமாக பாலியல் வெளிப்பாட்டு உந்துகையை கட்டமைத்தது அவரது உளவியல் சார்ந்த நிலைப்பாடு எனவும் கூறப்படுகின்றது.) அதன் தொடர்ச்சியில் இன்று உளவியல் பகுப்பாய்வு முறை பல்வேறு கட்டங்களைத் தாண்டி வந்துவிட்ட போதிலும் சிகம்ன் பிராய்டும் அதன் சில அடிப்படைகளைத் தகர்த்த யூங் உம் முக்கியமானவர்களாகக் கருதப்படுகின்றார்கள். சிக்மன் பிராய்டின் உளப்பகுப்பாய்வு முறையில் மனம் மூன்று விதமான பிரிவுகளைக் கொண்டது. இத், ஈகோ, சுப்பர் ஈகோ ஆகிய மூன்று பிரிப்புக்களை வைத்துக் கொண்டு மனத்தை அணுக முற்படுகின்றார். இதில் இத் என்பது பிராய்டைப் பொறுத்தவரை முக்கியமானது. நனவிலி மனம் அடக்கிவைக்கப்பட்ட ஆசைகளால் சூழப்பட்டது. பிராய்டைப் பொறுத்தவரை இத் இன் பெரும்பகுதிக் கூறுகள் பாலியல் ஆசைகளால் நிரம்பியவை என்பதும் அவற்றின் பிணைப்பு சக்தியே மனிதனின் சராசரி நடவடிக்கைகளை ஏதோவொரு விதத்தில் பாதித்துக் கொண்டிருப்பது என்பதுமாகும். பிராய்டைப் பிற்காலத்தில் ஆண்மையமான உளப்பகுப்பாய்வை முன்வைத்த ஆணாதிக்கவாதி என்று பெண்ணியவாதிகள் விமர்சித்ததற்கு பிராய்டின் லிங்க மையவாதமே காரணமாக அமைந்திருக்கக்கூடும்.
அதன்பின்பு மிஷேல் ஃபூக்கோவால் எழுதப்பட்ட The History of Sexuality நூலும் அவர் காலப்பகுதிக்குச் சமாந்தரமாக வாழ்ந்த லக்கான் மற்றும் டெல்யூஸ்-கட்டாரி போன்றோரும் பிராய்ட் மற்றும் யூங்கின் உளவியல் பகுப்பாய்வின் பாலியல் மையம் சார் கருத்துக்களை அடுத்த தளங்களுக்குக் கொண்டு சென்றுவிட்டார்கள்.
பாலியல் அறத்தின் பன்மைகள் தொடர்பான தனது கருத்தியல் வெளிப்பாடு மூலம் ஃபூக்கோ ஏற்கனவேயான ஒற்றை அறம் தொடர்பான கருத்தியலைச் சிதைக்க முனைந்தார் எனக்கூற முடியும். இது பிராய்டின் உளவியல் பகுப்பாய்வின் அடிப்படையைச் சிதைக்கும் முயற்சி எனக்கூற முடியும். ஹிஸ்டீரியா நோய்க்கூறுகளுக்குள்ளான பெண்களின் அடிப்படையே பாலியல் வெளிப்பாடு தொடர்பான கட்டுப்பாட்டு நிலை எனக்கூறப்படுகின்றது. பாலியல் நிலைப்பாடுகள் சார்ந்த அதிகாரம் ஒற்றை அறம் என்ற கருத்தியலூடு மட்டுமே தீக்கப்பட முடியும். பாலியல் அறத்தின் பன்மைத்துவம் என்பது உள ரீதியில் பாலியல் சார் விடுதலையை அளிக்கின்றது. இதன் மூலம் பாலியல் சார் உளவியலால் பாதிக்கப்பட்ட சமூகத்தின் விடுதலைப் பற்றிப் பேசியதில் ஃப்பூக்கோ முக்கியத்துவம் பெறுகின்றார். பிராய்ட் உளவியல் வைத்தியர் என்ற நிலைப்பாட்டில் இருந்து முன்வைத்த கருத்துக்கள் ஃபூக்கோவால் தத்துவாசிரியர் என்ற நிலைப்பாட்டில் இருந்து பெரும்பாலும் அதன் சமூகவியல் தளத்தில் எதிர்கொள்ளப்பட்டது.
லக்கானை பிராய்டின் தொடர்ச்சியாகவே ஆய்வாளர்கள் குறிப்பிட்டாலும் லக்கானது கருத்தியல் பிராய்டின் கருத்த்யலில் இருந்து பல இடங்களிலும் மாறுபடுகின்றது. முக்கியமாக லக்கான் உளவியல் பகுப்பாய்வு முறையில் மொழியியலை முதன்முறையாகப் பிரயோகித்தார். சமூகத்தில் மொழி முக்கியமான இடத்தை வகிக்கின்றது. மனிதர்களது சிந்தனை முறையில் பெரும் தாக்கத்தை விளைவிப்பது. இந்நிலையில் மொழியியலை உளப்பகுப்பாய்வுடன் இணைத்தது லக்கானை முக்கியப்படுத்தியது. பின் அமைப்பியல் காலத்தில் மொழியியல் முக்கியத்துவம் பெற்றது இதற்கான காரணமாகக் இருக்கக் கூடும். (லக்கானது 'படிமம்', 'குறியீடு' போன்ற கருத்தியலின் பாதிப்புக்கள் போத்ரியால் வரை இருந்ததையும் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.) ஒருவகையில் சசூரினது மொழியியல் அடிப்படையை பிராய்டின் உளப்பகுப்பாய்வுடன் இணைத்தவர் என லக்கானைக் கூற முடியும். பிராய்டைப் பொறுத்தவரை உளநோயாளர்களை அவர் ஒரளவுக்காவது வரையறுக்க முடியும் எனக் கருதியவர். ஆனால், லக்கான் அவ்வாறு கருதவில்லை. லக்கானைப் பொறுத்தவரை அனைவருமே உளவியல் நோயால் பீடிக்கப்பட்டவர்களே. ஒவ்வொருவரது அணுகுமுறையும் வெவ்வேறு விதமாக இருக்கின்றது என்பது அவரது வாதம். அதுமட்டுமன்றி 'உளவியல் குறைபாட்டு நிலையை' ஏற்ற இறக்கங்களுடன் கூடிய ஒன்றாக லக்கான் கருதியதில்லை. அவற்றை 'வித்தியாசங்கள்' என்ற நிலைப்பாட்டுடன் அணுகியமையில் இருந்து லக்கானது முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள முடியும்.
டெல்யூஸ்-கட்டாரி இரட்டையர்கள் பிராய்டை உளவியல் சார்ந்து மறுத்தார்கள். ப்ராய்டின் நனவிலி 'விருப்பு' என்பதன் பாலியல் அடிபடையில், அவர்களைப் பொறுத்தவரை 'விருப்பம்' என்பது கூட ஒரு அங்கமே தவிர அது இரு தன்னிலைகளுக்கிடையிலான தொடுப்பு அல்ல என்பது. இவர்களை படிப்பதற்கு மரபார்ந்த வாசிப்பு முறை நமக்கு உதவாது. நாம் நம்மை வேறொரு தளத்தில் கொண்டு போய் வாசிக்கும் போது மட்டுமே டெல்யூஸ்-கட்டாரியை விளங்கிக் கொள்ள முடியும். அவர்கள் இவ்வுலகத்தையே Mechanical Engineering அணுகுமுறையில் அணுகினார்கள். உடன் எபது கூட பல உறுப்புக்களால் ஆனது என்றும் அவை சில இடங்களில் தொடுக்கப்பட்டுள்ளன சில இடங்களில் தொடுப்பற்றி இயக்கமுறுகின்றன என்பதாகக் கூறினார்கள். அதாவது சிந்திக்கக்கூடிய ரோபோ போன்று மனிதனை அணுகியிருக்கின்றார்கள் போல் தெரிகின்றது. இதன் மூலம் வித்தியாசம் என்பதனூடாக அணுகினார்கள். இதன் காரணமாகத்தான் ஆண் எதிர் ஆணற்ற தன்மை என்ற பிராய்டின் கருத்தியலை பேணியவர் லக்கான் என்று பிற்காலப் பெண்ணியர்கள் லக்கான் மீது விமர்சனம் செய்த போதிலும் அவர்களால் பல இடங்களிலும் டெல்யூஸ்-கட்டாரியை ஆதரிக்க முடிந்திருக்கின்றது.
Deleuze and Guattari's concept of sexuality is not limited to the connectivity of just male and female gender roles, but by the multi-gendered flows that a "hundred thousand" Desiring-Machines create within their connected universe.
ஜூடித் பட்லர் இனது நேர்காணல் ஒன்றை ஒருவருடத்திற்கு முன் வாசித்திருந்தேன். அது பல புதிய வெளிகளை எனக்குத் திறந்து விட்டிருந்தது. துவித எதிர் இருமை இயல்பை வலியுறுத்தும் பால்வேறுபாட்டை அவர் தூக்கிக்கடாசுவது மாத்திரமல்லாது அதற்கு இடைப்பட்ட பல்வேறு சாத்தியங்களைப் பற்றிப் பேசுகின்றார். விஞ்ஞானம் அவற்றை இரண்டாக மாத்திரம் தானே ஏற்றுக்கொள்கின்றது என்பதைக் கூட அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. 'ஆண்குறி' மற்றும் 'ஆண்குறி அற்ற தன்மை' என்பதை வைத்துக் கொண்டு இன்பம் துய்ப்பிற்கான பாலியல் மன எழுச்சியை வரையறுத்துவிட முடியாது. /'பால்' என்பதை உயிரியல் ரீதியான வேறுபாடு மட்டுமே என்ற பார்வைக்குள் வைத்து பாலியல் என்பது நிகழ்த்துகை சாரப்பட்டதே என்ற கோட்பாட்டினடிப்படையில் நகருபவர். பால் சம்பந்தப்பட்ட இயல்புகளனைத்தும் சமூகத்தால் சுமத்தப்பட்டவை- கட்டமைக்கப்பட்டவை- என்பதாக தமது கருத்தியலை வளர்த்துச் செல்பவர். உதாரணமாக ஆணுக்கு 0 என்ற இலக்கத்தையும் பெண்ணுக்கு 1 என்ற இலக்கத்தையும் வளங்கும் போது, இடைப்பட்ட வெளியில் உள்ள முடிவிலி சாத்தியங்களையும் இருப்புக்களையும் கொண்டுள்ள தசமதான எண்களின் இருப்பினூடே இயல்புகள் மாறுபட முடியும் என்பதே இவர்களது வாதம். { 0.123, 0.199, 0.589, 0.999 } இன்னும், அவற்றின் இருப்புகள் கூட நிலையானதல்ல, அவை இயங்குகைக்கு உட்பட்டவை தமது இருப்புக்களை தானம் பற்றிய இருப்பு சார்ந்து மாற்றக்கூடியவை என்பதாக இக்கருத்தியல் மேலும் வளர்ச்சி பெறுகின்றது. இது பிளவுறும் தன்னிலைகள் சார் கருத்துடன் தொடர்புடையது. இங்கே ஓரினப்பாலுறவாளர்கள் தமக்குள் ஆணாகவும் பெண்ணாகவும் உருவகப்படுத்தல் என்பது சமூகம் நிகழ்த்தும் 'பாலியல்பு' தொடர்பான கட்டமைக்கப்பட்ட வன்முறையின்பாற்பட்டவையே../ என நான் முன்பொருமுறை எழுதியது ஞாபகம் வருகின்றது. இவை கருத்தியல் ரீதியானதாக இருப்பினும் - சமூகம் மற்றும் பால்வேறுபாடுகள் என்பதே கருத்தியல் ரீதியான கட்டுமானம் என்ற நம்பிக்கையில் இருந்து மட்டும் வரும் விடயம் அல்ல. கருத்தியல் ரீதியான மாற்றங்களில் உயிரியல் ரீதியான மாற்றங்களைச் சாத்தியப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை ஜூடித் பட்லர் அளித்துச் செல்கின்றார். (அரசியல் போராட்டங்களுக்குச் சமாந்தரமாகக் கூட இவற்றை வைத்துப் பார்க்க முடியும்.) ஜூடித் பட்லரைப் பொறுத்தவரை பெண் பாலியல் இன்பம் என்ற பெரும் தொடைக்குள்ளான உப தொடையே ஆணின் பாலியல் இன்பம் எனக்குறிப்பிடுகின்றார். பெண்ணினது பாலியல் இன்பம் என்பது அளவற்றுப் பெருகுவது. சுழற்சித் தன்மை மிக்கது. ஆணின் பாலியல் இன்பம் அவ்வாறனதல்ல. ஆரம்பம்-உச்சம்-முடிவு என்ற வகைமாதிரிக்குள் கட்டுப்பட்டது. பெண்ணின் பாலியல் இன்பத்தைத் திருப்தி செய்ய முடியாத நிலையில் ஆணால் வழங்கப்பட்டதே அல்லது திணிக்கப்பட்டதே தற்போதைய உறவுநிலைகளும் பாலியல் இன்பம் தொடர்பான கருத்தியல் கட்டுமானங்களும். ஜூடித் பட்லரைப் பொறுத்தவரை அவர் ஓரினச்சேர்க்கையாளர்களில் ஆண-ஆண் என்பதை அவ்வளவாக கவனத்தில் எடுக்கவில்லை. பெண் ஓரினச்சேர்க்கையாளர்கள் அடையும் இனபமே பாலியர் சார்ந்து இவ்வுலகத்தில் அடையப்படும் அதி உச்ச இன்பம் என்பது அவரது கருத்தின் சாராம்சம்.
ஜூடித் பட்லரின் கருத்துக்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில் Brown University ஐச் சேர்ந்த மூலக்கூறு, உயிரணுவியல் மற்றும் உயிர் இராசாயனத்துறைச் சேர்ந்த Anne Fausto-Sterling இனது Sexing the Body: Gender Politics and the Construction of Sexuality அமைகின்றது. ஜூடித் பட்லர் போன்று அளவற்றுப் பெருகும் பால்வேறுபாட்டு நிலகளைப் போலன்றி ஆனால் ஜூடித் பட்லரின் கருத்தியலுக்குச் சாதகமாகப் பேசுகின்றார் Anne Fausto-Sterling. மராபார்ந்த முறையில் அமைந்த ஆண எதிர் பெண் வேறுபாடுகளை மறுத்து ஐந்து விதமான பாலியல் நிலைகள் பற்றிப் பேசுகின்றார் Anne Fausto-Sterling.
The treatment of intersexuality in this century provides a dear example of what the French historian Michel Foucault has called biopower. The knowledge developed in biochemistry, embryology, endocrinology, psychology and surgery has enabled physicians to control the very sex of the human body. The multiple contradictions in that kind of power call for some scrutiny. On the one hand, the medical "management" of intersexuality certainly developed as part of an attempt to free people from perceived psychological pain (though whether the pain was the patient's, the parents' or the physician's is unclear). And if one accepts the assumption that in a sex-divided culture people can realize their greatest potential for happiness and productivity only if they are sure they belong to one of only two acknowledged sexes, modern medicine has been extremely successful.
மேலதிக வாசிப்பிற்கு - The Five Sexes: Why Male and Female Are Not Enough
உண்மையில் பாலியலையும் அது சார் உளவியலையும் பற்றிப் சமூகத்தில் பரந்த உரையாடலை மேற்கொள்ள வேண்டும் என்ற விருப்பு என்னிடம் உண்டு. ஆனால், எமது சமூகப்பரப்பில் அது மிகத்தவறாக விளங்கப்படும் ஆபத்து இருக்கின்றது. எனது உரையாடலை மீள்வாசிப்புச் செய்யும் மேற்படி கட்டுரையில் சில போக்குகளை மேலோட்டமாக குறிப்பிட்டுள்ளேன். இன்னும் மேலதிகமான விடயங்களை எதிர்காலத்தில் இது தொடர்பாக எழுத நேரின் குறிப்பிட முடியும்.
ஏற்கனவே உரையாடலில் குறிப்பிட்ட விடயத்தையும் இவ்விடத்தில் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.
* * * * * * *
சாதாரண சமூகச்சூழலை மையமாக வைத்து எழுதப்பட்ட கட்டுரை பிராய்டின் உளவியல் வரையான உரையாடலை எதிர்பார்த்து நிற்கின்றது. சமூகம் மீதான பிராய்டின் உளவியல் பார்வை என்பது தனியே பாலியலை மையப்படுத்தி முன்வைக்கப்பட்டதென்ற குற்றச்சாட்டு அதற்கு பின்வந்த எத்தனையோ உளவியலாளர்களால் வைக்கப்பட்டுவிட்டது. பூக்கோவும் அதற்கு பின்னான டிலீஸ்-கட்டாரியும் அதைப் புரட்டி போட்டுவிட்டனர்.
இன்னும் பெண்ணியம் சார்ந்து அதன் குறைபாடுகள் பெண்ணியர்களால் காரசாரமாக விவாதிக்கப்பட்டுவிட்டது. ஆணாதிக்க உலகு சார்ந்தே அவரது பார்வை முன்வைக்கப்படது. அதுவும் இன்று பலவகைகளில் மாற்றம் பெற்றுவிட்டது. இன்னும் சமூகம், கலாச்சாரம் சார்ந்து இதன் பார்வைகள் வெவ்வேறு பரிமாணம் எடுக்கக்கூடியவை. மேற்கில் வளரும் குழந்தையையும் ஆசியாவின் ஏதோ ஒரு பகுதியில் வளரும் குழந்தையையும் ஒரே பார்வைக்கு உட்படுத்திப் பார்க்க முடியாது. இருவகைத் தளங்களும் பார்வை நோக்கில் தாம் சமூகம் சார்ந்து இயங்கும் சுழற்சியின் மையப்புள்ளியினது 'அளவை' களை முக்கியமாக கவனத்தில் எடுக்க வேண்டும். மற்றும் சிறுவர் துஸ்பிரயோகம் எனும் பார்வை வீச்சுக்குள்ளேயே இக்கட்டுரையை வகைப்படுத்திவிட முடியும். ஆயினும் பின்னூட்டங்கள் அவ்வீச்செல்லை தாண்டி ஈடிபஸ் மனச்சிக்கல் வரை வந்துவிட்டது. மேலே குறிப்பிட்டது போல பிராய்டின் உளவியல் பார்வைகள் பாலியலை மையப்படுத்தி துவித இருமைகளுக்குள் ஆட்பட்டவை. ஆண், பெண் என இரு புள்ளிகள் பற்றி அலைவுறுபவை. பிற்குறிப்பில் எக்ஸ்-குழு சொன்னது போல உலகம் அதை தாண்டி வெகு தூரம் வந்தாயிற்று.
இதில் நான் சொல்ல வந்தது ஈடிபஸ் சிக்கலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இலக்கியங்கள் சார்ந்தவை. ஈடிபஸ் என்ற பெயர் வரக்காரணமானதே சுவாரசியமான? கதைதான். ஈடிபஸ் கிரேக்க மன்னனாக இருந்தவன். இவன் தாயின் மீது காதல் கொண்டு தாயுடனான உறவின் மூலம் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டவன். பின் தகப்பனை கொன்று அரியாசனத்தை கைப்பற்றிக்கொண்டவன். அவனது பெயரை வைத்தே பின்னர் பிராய்டால் உருவகப்படுத்தப்பட்ட மனச்சிக்கல் அழைக்கப்பட்டது. சேக்ஸ்பியரின் புகழ்பெற்ற 'ஹம்லெட்' இனது கதையும் இவ் ஈடிபஸ் சிக்கலை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டது.
....This paper shows how the Oedipus complex theory can be applied to Hamlet, the main character of "Hamlet" by William Shakespeare and the issues that he faces concerning his mother and girlfriend. The paper shows that the intense rage that Hamlet projects onto Queen Gertrude (his mother), Ophelia (his girlfriend) and women in general compiles this version of Oedipus complex triangle. Hamlet finds himself strangely drawn to the act of matricide whether or not he blatantly expresses it, because he partially blames his mother for the circumstances leading up to his father's death, although he has a strange sexual affinity towards her. The paper describes how Hamlet releases his frustration about his father's death indirectly on Ophelia while raising to the surface strong undercurrents of an Oedipal complex with Gertrude as its center...
விளாதிமிர் நபகோவின் 'லொலிட்டா' எனும் புகழ்பெற்ற நாவல் 'எலக்ற்ரா' மனச்சிக்கலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதே. தகப்பன் வயதை ஒத்த ஆடவனுடன் காதலுறும் சிறிய பெண் பற்றியது. இவ்வாறான மனச்சிக்கலை? கொண்டவர்கள் ஏராளமானவர்கள் இருக்கின்றன என்கின்றன ஆய்வுகள். இன்னும் எல்லோருமே ஏதோவொருவகையில் இச்சிக்கலால் பீடிக்கப்பட்டவர்களே. அவரவர் பொறுத்து அதன் ஆளுகை வீதத்தில் மாறுபடுகின்றனர் என்கின்றனர் ஆய்வாளர்கள். இன்னும் ஜேம்ஸ் ஜோய்ஸ் ஐ இவ்விரு சிக்கல்களும் வாய்க்கப்பெற்றவரென சொல்வர். ஜேம்ஸ் ஜோய்ஸ் தனது தாயாருடன் உறவைப்பகிர்ந்து கொண்டவர் எனக்கூறப்படுகிறது. அதே நேரம் பிற்காலத்தில் தனது மகளுடனும் உறவைப்பகிர்ந்துகொண்டதாக கூறப்படுகிறது. சமப்பாலுறவுகள் போன்றே வரலாற்றின் நெடிய வழியெங்கும் புறநடையாக ஈடிபஸ்-எலக்ற்ரா சிக்கல்களும் நடைபோட்டு வந்துள்ளன. ஆயினும் சமப்பாலுறவுக்கு கிடைத்த அங்கீகாரங்கள் போன்று இவ்வகைமாதிரிகள் பெறவில்லையென்றே கூறவேண்டும். அதற்கு சிறுவர் உரிமை போன்ற விடயங்கள் காரணங்களாக இருந்து இருக்கலாம். லொலிட்டா போன்றவை பிற்காலத்தில் திரைப்படமாக எடுக்கப்பட்டன. அவ்வகையில் china town, American Beauty போன்ற திரைப்படங்களும் இம்மையக்கருத்தில் வெளிப்பட்டன. அமெரிக்கன் பியூட்டி மனச்சிகலுக்கு உள்ளான சமுதாயமாகவே ஈடிபஸ் மனச்சிக்கல் சமூகத்தை காட்ட முயற்சித்தது. தனது தகப்பனிடம் காதல் வயப்படும் நண்பியையும் அவளையும் சுற்றிப் பின்னப்பட்ட கதையே அது. நமது தமிழ்ச்சூழலிலும் அது பற்றிய படைப்புகளும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. சாரு நிவேதிதாவின் உன்னத சங்கீதம் சிறுமியுடனான நடுத்தரவயது ஆணின் உறவை நியாயப்படுத்திச் செல்கின்றது. அவ்வாறே சோபாசக்தியின் 'ம்' கூட, (அது அரசியல் நாவல் என்ற போதிலும்) ஏதோ ஒரு வகையில் எலக்ற்ரா சிக்கலை நியாயப்படுத்தியே தமது பார்வையை முன்வைக்கின்றன. (கவனிக்க- வன்புணர்வு அல்ல.) ஆயினும் அவர்கள் விமர்சனத்தை எதிர்கொள்ள தவறவில்லை. அதை பற்றிய விவாதங்கள் இன்னும் தேவையானவையே. சமூகச்சூழலில், நியாயப்படுத்தல்கள் கொண்டுவரும் காரணங்கள் சிறுவர் மீதான பாலியல் வன்முறை அல்லது நிர்ப்பந்தத்திற்கான ஏதுவாய்களாக இருக்கமுடியும் என்பது உண்மைதான். முதிர்ச்சியடையாத சிறுவர் பாத்திரத்தை கதைக்களன் ஆக்குவது, சிறுவர் உரிமை தொடர்பான பிரக்ஞை உள்ளவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது தான்.
சோபாசக்தியின் 'ம்' இல் வரும் இக்கருதுகோள் தொடர்பான விடயத்திற்கு பொடிச்சி சொல்லும் காரணங்கள் ஏற்புடையனவே...
//...குழந்தையை புணர்ந்தவனை பெடோபைல் (pedophile) எனச் சட்டம் தரம் பிரிக்கிறது; அவனும் இச் சமூகத்தின் victim என்பதாக ஷோபாசக்தி. அவனுக்கு, வாழ்நாளெல்லாம் தேடிப் பெறாத ‘பரிசுத்தமான காதல்’ அவனது குழந்தையிடம்தான் இருக்கிறது. அவன் நிறைய சொல்கிறான். சொல்லிக்கொண்டேட இருக்கிறான். சிறுமி தனது பக்கத்தைச் பேசவே இல்லை. ''அவளது இருஇதழ்களின் நடுவே தோல் வளர்ந்தது”
வன்முறையாளரின் நோக்கிலிருந்து இந்த பிரதி பேசுகிறது; -இதில், முதிர்ச்சியற்ற, பரிசுத்தமானவளாய் இருக்கிற, பிரதியாசிரியரால், பேசுவதற்கு எவ் வார்த்தையும் அனுமதிக்கப்படாத, அந்த சிறுமியுடைய பக்கத்தை அவள்தானே சொல்ல முடியும்? அந்தப் பக்கத்திற்கான பதில், பிரதியில் அவளது மெளனம் மட்டுமே...//
சிறுமி என்னும் முறையில் அது அத்துடன் நிற்க,
இன்றைய தமிழ்ச்சூழலில் ஈடிபஸ் சிக்கல்/ இலக்கியம் என்பது பேசப்படாத பொருளாகவே இருக்கின்றது. (காமலோகம் தவிர்த்து- இளைய ஆண்களால் எழுதப்படும் பாலியல்பிரதிகளில் பெரும்பாலானவை நடுத்தர வயதுப்பெண்களுடனான உற்வைப் பேசுபவையாகவே இருக்கின்றன. இலக்கிய தரம் என்ற அளவில் அவற்றிற்கு ஏற்படும் தோல்விகளால் அவை வெறும் 'களவாக' வாசிக்கும் பிரதி வகைக்குள்ளேயே நின்றுவிடுகின்றன. இன்னும் ஷகீலா போன்ற நடுத்தரவயதுப்பெண்களை வைத்து திரைப்படங்கள் தயாரிப்பவர்களது முக்கியமான இலக்கு பதினம வயது பையன்களே. தமிழ்சமூகம் ஈடிபஸ் சிக்கல் வகைமாதிரியில் எவ்வளவு தூரம் தன்னை ஆட்படுத்திக்கொண்டுள்ளது என்பதற்கு வேறு உதாரணம் வேண்டுமா என்ன?) தமிழ்ச்சூழலில் பெண்ணியம் பேசுவோர் கூட பெண்ணை புனிதப்படுத்தி/ பெண்ணுடலைக் கொண்டாடும் வகைமாதிரியில் இருந்து வெளியில் வருவதாக தெரியவில்லை. (ஒரு சிலரைத் தவிர..) ஆக, இவ்வகை பிரதிகள் தமிழுக்கு இப்போது கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது. ஈடிபஸ்- எலக்ற்ரா என இருவகை மாதிரியிலும் தமிழில் பிரதிகளைப் பெறக்கூடியதாக இருக்கின்ற போதும் அவை அனைத்தும் ஆண்களாலேயே எழுதப்பட்டுள்ளன. இது தொடர்பான பெண்ணின் பார்வை என்பது தமிழில் இல்லை என்றே சொல்லலாம். பெண்ணியம் சார்ந்து இதன் முக்கியத்துவம் என்னவென்றால், 'ஆண்' மீதான எதிர்ப்புணர்வு பெண்ணைக் 'கொண்டாடும்' இயல்புடன் வைக்கப்படுகின்றதென்பதற்கு அப்பால், ஈடிபஸ் மனச்சிக்கல் மீதான பார்வையற்ற நிலைமை ஏதோ ஒரு விதத்தில் ஆணதிகாரம் தன்னை 'பெண்' மீது நிறுவி நிற்கின்றதென கொள்ளமுடியும். சமப்பாலுறவு எனும் பார்வைக்கு முதல் 'ஆண்' மீதான மறுப்பு என்பதை நிறுவும் வழி பெண்களால் புனையப்படும் ஈடிபஸ் சிக்கல் வகைமாதிரியான பிரதிகளே. அது அடக்கும் 'ஆணை' மறுத்து அடங்கும் 'ஆணை' விரும்பி நிற்பது. ஆயினும் அவ்வகைத்தெரிவுகளுக்கு அப்பால் பெண்மை சமப்பாலுறவை தெரிவு செய்கின்றது. அதன்மூலம் தன்னை தகவமைத்துக் கொள்ள முயல்கின்றது. ஈடிபஸ் 'மனசிக்கல்?' தொடர்பான விவாதங்கள் இன்னும் எமக்கு அவசியமானவையே. ஆயினும்,
//..ஆண், பெண் என்ற வித்தியாசம் கடந்த சூழலை நோக்கிய சமூகப்பார்வையில் மேற்படி கட்டுரை தனது மதிப்பை இழக்கின்றது. ஆரம்ப பெண்ணியத்துக்கு பின்பான பெண் மீதானஆணதிகாரம் ஒரு கட்டத்தில் பெண்ணை 'கொண்டாடுவதன்' மூலம் நிலைநிறுத்தப்பட்டது. இன்றைய உலகு அதை தாண்டிய பரிமாறும் ஆண், பெண் இயல்புகள் உள்ள வெறுமனே பௌதீகஉடல் சார் ஆண், பெண் வேறுபாடு மட்டுமேயென்ற தளத்தில் தன்னை தகவமைத்துகொள்ள முற்படுகின்றது. ஆயினும் இன்னும் ஆணாதிக்க கட்டமைப்பும், ஆண், பெண் என்ற வித்தியாசமான அணுகுமுறையும் பெரும்பாலும் நிலைகொண்டுள்ள இலங்கை போன்ற சமூகத்தில் இக்கட்டுரையின் தேவையை நிராகரிக்க முடியாது..//
என்பது உண்மையே...
Thursday, May 28, 2009
உரையாடல் - 5 (x-group, சேகர்) - [[மீள்வாசிப்பு]]
Posted by Unidentified Space at 2:57 AM 1 comments
Subscribe to:
Posts (Atom)