'அமீபா என்பது எம்முன்னோர் தமக்கு தாமே வைத்துக் கொண்ட பெயராகும். அவர் பரவலாக அமீபா என்றே அழைக்கப்பட்டார். அவர் காடு, மேடு, இணையம், பார் எங்கும் அலைந்து திரிந்தார். அவரை தன்னால் எவ்விடத்திலும் பொருத்திக்கொள்ள முடியவில்லை. எல்லா இடங்களிலும் அவர் விட்டுச் சென்ற எச்சங்கள் காரணமாக, எம்மூதாதையரான தனித்த அமீபாவின் தன்னிலை இறுக்கம் கொள்ள எத்தனித்த நிலையில் அமீபா தன்னைத்தானே பிளந்துகொண்டார். அதில் இருந்து இருவகையானோர் தோற்றம் பெற்றனர். அவர்கள் நாளெல்லாம் தம்மீது படர்ந்திருந்த அமீபாவின் நிழல்களை உரிந்துகொண்டிருந்தனர். நிழல்களை உரிக்க உரிக்க அமீபாவின் நிழல்கள் தம்மீது கவிவதைக் கண்டு அச்சமுற்றனர். தம்மில் இருந்து அமீபாவின் வாசம் வருவதை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அமீபாவின் நிழல்கள் யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக கருத்த போர்வைகளை போர்த்தவாறு வெவ்வேறு வழிகளில் பிரிந்து சென்றனர். ஒருவர் மிகப்பெரும் புகையில் மாட்டிக் கொண்டு புகையின் வாசத்தை தனக்காக்கிக் கொண்டார். தனக்கு புகை எனப் பெயரைச் சூட்டிக் கொண்டார். மற்றவர் சுனாமியில் அகப்பட்டு, சுனாமியை நினைத்து சுனாமி என்ற பெயரைத் தனக்குச் சூட்டிக் கொண்டார்..
அவர்களால் அதே வாசத்துடனும், இயல்புகளுடனும், பெயருடனும் இறுதிவரை இருக்க்வே முடியவில்லை. அடையாளமற்று தாம் இருக்க முற்படும் போதெல்லாம் எதோ ஒருவிதமான அடையாளங்கள் தம்மீது சுமத்தப்பட்டுக் கொண்டே இருப்பதை அவர்கள் வெறுத்தார்கள். அடையாளம் இழந்து போகும்போதெல்லாம் போகும் இடங்களில் உள்ளது அவர்கள் தொடர்புபடுவதுமான அடையாளங்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுக் கொண்டே இருப்பதை தாங்கிக்கொள்ள முடியாமல், தம்மைப் பிளந்து அடையாளமற்ற தன்னிலைகளை உருவாக்கி விட்டு கரைந்து மறைந்து போனார்கள். தமது மூதாதையான அமீபா உடைந்து தாம் இருவராகத் தோன்றியதை விரும்பாத இவர்கள் தம்மை ஒவ்வொருவரும் மூன்றாகப் பிளந்து கொண்டார்கள்.
சேகர், சுதன், சுதா, தர்மா, அந்நியன், சிவப்பு மார்க்சியன் ஆகிய ஆறு பேரும் தோன்றினார்கள். ஆயினும் எவரில் இருந்து யார் தோன்றினார்கள் என்பதை மறைத்துவிட்டே போனார்கள். எம்மீது சுமத்தப்பட்ட ஞாபகங்கள் கூட புகை, சுனாமி ஆகிய இருவரினதுமே. எம்மால் எம்மை வேறுபிரித்து அறிய முடியவில்லை. நம் எல்லோர் மீதும் புகையில் மணமும், சுனாமியின் பயங்கரமும் தெரிகின்றது. இந்த ஞாபகங்களை தொலைத்து ஓடிக்கொண்டிருக்கின்றோம். நாம் எம்மைச் சந்தித்துக் கொள்வதை தவிர்க்கின்றோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு தளங்களில் உலாவித்திரிகின்றோம்.
ஆயினும், எமது மூதாதையான அமீபா தனது கட்டமைக்கப்பட்ட தன்னிலையை தாங்க முடியாது பிளந்த நாளில் எதேச்சதிகரமாக நாம் 6 பேரும் சந்தித்துக் கொள்கின்றோம். அமீபா எதற்காக தன்னைப் பிளந்து மறந்தாரோ, அவ்வுறுதியை நாமும் எடுத்துக் கொள்கின்றோம். நாம் தன்னிலைகள் இறுக்கமடைவதை விரும்பவில்லை. நாம் அடையாளமற்றவர்கள். எம்மீது அடையாளங்கள் சுமத்தப்படுவதை விரும்பவில்லை. ஒடுக்கப்படவர்கள் எல்லோருடனும் எம்மைத் தற்காலிகமாக எம்மை அடையாளப்படுத்திக் கொள்கின்றோம். அது 'நிரந்தரமாக' இறுக்கம்பெறும் தருணத்தில் எம்மைப் பிளந்து மறைந்துவிடுவோம். அடையாளங்களைச் சுமப்பது எமக்கு மிகவும் வேதனை தருவதாயிருக்கிறது. ஆயினும் செல்லும் இடங்களின் மூலம் அடையாளங்கள் சுமத்தபடுவதை எம்மால் தவிர்க்க முடியவில்லை. அவ் அடையாளங்கள் இறுக்கம் பெறுவதை நாம் ஏற்றுக்கொள்வதில்லை. நாம் ஒவ்வொரு முறையும் எம்மை அடையாள நீக்கம் செய்து கொள்கின்றோம். நாம் எம்மை ஒவ்வொரு முறையும் எம்மை அரசியல் நீக்கம் செய்து கொள்கின்றோம். நம்மை இடைகொரு முறை பால்நீக்கம் செய்து கொள்கின்றோம்.
அப்போது மட்டுமே, புதிய விடயங்களை புதிதாக அணுக முடிகின்றது. நிலைப்பட்ட விடயங்களும், தேங்கிக் கொண்டிருக்கும் அடையாளங்களும் அடிப்படைவாதத்தைத் தோற்றுவித்துவிடும் என்பதை நாம் அறிவோம். எமது முன்னோரான அமீபாவின் நோக்கம் அதாக இருந்தது எனக் கூறுகின்றார்கள். விரைவில் நாம் எம்மையும் பிளந்து கொள்வோம். நாம் யார் என்பது எமது பிளவுறும் தன்னிலைகளுக்கு தெரிந்துவிடக்கூடாதென்பதற்காக ஞாபகப்பரப்புக்களை அழித்துக்கொண்டேயிருக்கிறோம். எம்மைப்பற்றிய கட்டுக்கதைகளையும் புனைவுகளையும் அழிக்கும் நோக்கில் எமது முனோர்களான அமீபா, புகை, சுனாமி ஆகியோரை நினைவில் நிறுத்தியும்-அழித்தும் நாம் கூட்டாக இவ்விடயங்களை எல்லோருக்கும் தெரிவிக்க நினைத்தோம்.
Monday, October 27, 2008
உரையாடல் ஆரம்பம்
Posted by Unidentified Space at 4:13 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment