Thursday, January 22, 2009

18 உரையாடல்களும் 15 மாதங்களும்.. [[ மீள்வாசிப்பு ]]

இணையவெளியில் உரையாடலை ஆரம்பித்து அண்ணளவாக 15 மாதங்கள் பூர்த்தியாகிவிட்டன. இதுவரையான 15 மாதங்களில் 18 உரையாடல்களை நிகழ்த்தியாயிற்று. இதனூடாக பல்வேறுபட்டவர்களுடன் உரையாடல் சாத்தியமாகியிருக்கின்றது. இன்னும் பலருடன் உரையாடல் சாத்தியமாகாத போதிலும் ஊடாட்டம் ஒன்று நடைபெற்றிருக்கிறதெனக் கூறமுடியும். அதை விட பல வாசகர்களுடனும் கருத்தைப் பகிர்ந்துகொள்ளக் கூடியதாக இருந்தது. 15 மாதத்திற்கு முற்பட்ட கருத்தியல் சூழலுடன் ஒப்பிடும் போது தற்போது அச்சூழல் பலவிதத்தில் மாறியிருக்கிறதெனக் கூற முடியும்.

எமது எழுத்து பெரும்பாலும் எழுத்தாளர்களுக்கானதாகவே இருந்திருக்கிறது. எழுத்தாளர்களுடனான உரையாடல், எழுத்தாளன் முன்வைத்த கருத்து தேங்கிப்போவதையோ, நிலைத்து 'கல்வெட்டாகிக்' கனத்து நிற்பதையோ எமது உரையாடல் தகர்த்தெறிந்தது. அதுமட்டுமல்லாது, எழுத்தாளன் முன்வைத்த தீர்க்கமான கருத்துக்கு எதிராக அல்லது அதை மறுக்க நினைத்த தீர்க்கமான கருத்திற்கு எதிராக எமது உரையாடலை நிகழ்த்தினோம். கருத்தியலின் 'நிலையாமையை' வலியுறுத்துவதாக எமது உரையாடலை தயார்ப்படுத்தினோம். கருத்துக்களுக்கு எதிர்நிலைப்பாடு எடுத்து 'விவாதம்' புரிவதைத் தவிர்த்து அதனை 'உரையாடலாக' மாற்ற நினைத்தோம். எழுத்துக்களினதும், நிகழும் உரையாடல்களினதும் போக்கை மறுத்தும், விடுபடல்களினது இடைவெளியை நிரப்பியும் சுருள் உரையாடல் (Spiral Discourse) 1* ஒன்றுக்கு தமிழ்சமூகத்தைத் தயார்ப்படுத்த வேண்டிய தேவை இருந்தது. இச்சுழற்சி உரையாடல் மூலம் அனைத்துவகைத் துவித எதிர் இருமைக் (Binary opposition) 2*கட்டமைப்பு மனநிலையையும் தகர்த்தல் எமது நோக்கமாயிருந்தது. விடுபடல்களை நிகழ்த்தியவாறு ஓரிழையில் தொங்கியவாறு சென்றுகொண்டிருந்தவர்களின் கண் முன்னே 'இழைக்கொத்துக்களைக்' காட்டி நையாண்டி பண்ணினோம். புதிய புதிய இழைகளில் அவர்களைத் தொற்றவைத்து அவர்களது 'துவித எதிர் இருமை' மனநிலையைத் தகர்க்க நினைத்தோம்.

மனித மனங்கள் எப்போதும் துவித எதிர் இருமை மனநிலையினூடாகத் தம்மைக் கட்டமைத்தே பழக்கப்பட்டவை. தமிச்சமூகம் தனது வாழ்வின் பெரும்பகுதியை தமிழ்ச்சினிமாவுடன் ஊடாடியே கழிக்கின்றது. தமிழ்ச்சூழலில் பிறந்த ஒருவன்/ஒருத்தி தமிழ்ச்சினிமாவின் பாதிப்பில் இருந்து தனியே வாழ்ந்துவிடமுடியாது. தமிழ்ச்சினிமாவின் நேரடியான பாதிப்பில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டாலும் அதன் மறைமுகத்தாக்கத்திற்கு ஆளாவதை தவிர்த்துவிடவே முடியாது. ஏனெனில் நாம் ஊடாட நினைக்கும் அல்லது தவிர்க்க முடியாமல் ஊடாடும் புள்ளிகள் தமிழ்ச்சினிமாவின் தாக்கத்திற்கு உட்பட்டிருப்பதை நாம் வாழ்வில் பலமுறை உணர்ந்திருப்போம். அண்மைக்காலத்திற்கு சற்று முன்னர்வரை தமிழ்ச்சினிமா முற்றுமுழுதாக துவித எதிர் இருமைக் கட்டமைப்பிற்குள்ளேயே இயங்கியது எனக் கூறமுடியும். அதன் இயக்கம் என்பதே த்வித எதிர்மையின் எதிரெதிர் துருவ இயங்குகையாகவே காணப்பட்டது. ஆண்மை x பெண்மை, நல்லது x தீயது, கதாநாயகன் x வில்லன், தேசபக்தி x தீவிரவாதம் என்றவாறாக அதன்போக்கு இக்கட்டமைப்பிற்குள் தீவிரமாக இயங்கியது. உலகக நிகழ்ச்சிப்போக்கின் அனைத்து போக்கையும் தனிநபர் சார்ந்து இவ்வகைப்பட்டுக்குள் அடக்கிவிட முடிகின்றபோதிலும் தமிழ்ச்சினிமாவின் போக்கு சற்று வித்தியாசப்பட்டது. துவித எதிர் இருமைகளினதும் உச்சப்புள்ளிகளின் இருப்பும் அதன் இயக்கமாகியது. இதனால் அதன் தொடர்ச்சிக்கும் வெற்றிக்கும் இவ்வெதிர் நிகழ்வுப்பரப்பிற்குள் பிம்பங்களைக் கட்டமைத்து ரீல்களை ஓட்ட வேண்டியிருந்தது. எமது அனைத்து வகையான கலைகளும் சினிமாவில் தங்கிப் போய் இருக்கின்றன. கலைகள் சமூகத்துடன் ஊடாடுபவை உரையாடுபவை என்பதன் அடிப்படையிலும் தமிழ்நாட்டில் சினிமா அரசியலுடன் நெருங்கிய தொடர்பை வைத்திருப்பதன் அடிப்படையிலும் அவற்றின் தாக்கம் அதன் வாழ்நிலைப்பரப்பிற்குள் அகப்பட்ட அனைத்திலும் தனது செல்வாக்கைச் செலுத்தியது எனக்கூறமுடியும்.

தமிழ் மரபில் 3* துவித எதிர் இருமை மனநிலை ஆழமாக உன்றி நிலைத்திருப்பதைக் காண்கின்றோம். அவற்றில் இருந்து விடுபட வேண்டியதன் அவசியம் எம்மால் இன்னும் உணரப்படவும் இல்லை. நாம் இத்தாக்கத்தில் இருந்து வெளியேறியவர்கள் எனக்கூறவில்லை. நாம் அதில் இருந்து விடுபட எத்தனிக்கும் மனநிலையைச் சார்ந்தவர்களாக இருக்கின்றோம். எமது சமூகத்தில் அதன் தாக்கத்தை குறைக்க ஆசைப்படுபவர்களாக இருக்கின்றோம். அம்மனநிலையைக் கடந்து 'பலசாத்தியப்பாடுகள்' என்னும் கருத்தியலையும் நிலையான சாத்தியம் என்னும் நிலையைக் கடந்து நிலைய்ற்ற சாத்தியங்கள் என்னும் கருத்தியலை தோற்றுவிப்பவர்களாக அதனை ஊக்குவிப்பவர்களாக இருக்க ஆசைப்படுகின்றோம். பொதுமனநிலையை பல்சாத்திய மனநிலைக்கு மாற்றுவதனூடாக பொதுமனநிலை கட்டமைத்திருக்கும் பாசிசக்கூறுகளைக் களைய நினைக்கின்றோம். இக்களைவின் மூலம் விளிம்புநிலைச்சாத்தியங்கள் தமக்கான உற்சாகத்துடன் வெளிக்கிளம்பும் என்பது எமது நிலைப்பாடாயிருக்கின்றது. சிறுபான்மை இன மக்களின் உளவெளிப்பாடுகள், சிறுபான்மை மத மக்களின் வெளிப்பாடுகள், சிறுபான்மைப் பாலியல் கருத்துடையோரின் வெளிப்பாடுகள், சாதிய ரீதியாகவும் கருத்தியல் ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட மக்களினதும் வெளிப்பாடுகள் போன்றவற்றினது சமூகரீதியான அங்கீகாரத்திற்கு துவித எதிர் இருமை மனநிலையைக் கடந்த உரையாடல்கள் அவசியம். வெறுமனே விளிம்பின் மீதான அளவற்ற துதிபாடுகையும் கொண்டாட்டமும் துவித எதிர் இருமை மனநிலையை மேலும் இறுக்குவதோடும் பிளக்கப்பட கருத்தியலின் உச்சநிலைக்கு இருசாராரையும் அழைத்துச் செல்லும் என்பது எமது அசைக்க முடியாத நம்பிக்கை. அதன்வழியான பயணம் என்பது எம்மை ஒரு முட்டுச்சந்தில் நிறுத்தும். எமது செயற்பாடுகள் அனைத்தும் ஒருவித செயலற்ற நிலையை( Deadlock ) 4* அடைந்து பாசிச நிலையில் எம்மைத் தக்கவைக்கும் என்பதை நாம் நம்புகின்றோம்.

இவற்றின் கேள்விகளில் இருந்தே எமது உரையாடல்கள் ஆரம்பமாகின. 'எமக்கான' 'தீர்க்கமான' கருத்துக்களை நாம் கொண்டிருக்கவில்லை. அனைத்துவகையான கருத்தியல்களையும் உள்வாங்கிக்கொள்ளுமாறு எமது மனதை தயார்ப்படுத்தி வைத்திருந்தோம். அதில் இருந்து எமது உரையாடலை நகர்த்திச் செல்லக்கூடியதாக இருந்தது. எம்மால் வெற்றிகரமாக எமது உரையாடல்களை நகர்த்திச்செல்ல முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்வதில் எமக்கு எவ்வித மனத்தடங்கலும் இல்லை. ஏனெனில் எமது உரையாடல்கள் அனைத்தையும் வன்மம் நிரம்பியவர்களுடனும், முடிவுகளைக் கொண்டாடுபவர்களுடனும், குழுவாத மனநிலைக்குத் தம்மைப் பொருத்திக் கொண்டவர்களுடனும், தமக்கான கருத்தியலைக் கண்டடைந்து விட்ட புழங்காகிதத்தில் இருந்தவர்களுடனும், புதிய கருத்தியல்கள் தமது இருப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன என்று நம்பிக் கொண்டிருந்தவர்களுடனும், பழிவாங்கும் உணர்ச்சியுடன் இருந்தவர்களுடனும், அதிகார மோகத்திற்கு ஆட்பட்டிருந்தவர்களுடனும், தாம் ஒடுக்கப்பட்ட வர்க்கத்திற்கு சார்பானவர்கள் என்ற நம்பிக்கையினூடே சுயதிருப்திப் பட்டுக் கொண்டிருந்தவர்களுடனும் நிகழ்த்த வேண்டி இருந்தது. அவர்களது நம்பிக்கை அவர்களது விருப்பு சார்ந்து எதிர்நிலைப்பாடு எடுத்து 'விவாதம்' புரிந்த சந்தர்ப்பங்களும் உண்டு. சமூகத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் முன்முடிவுகளுடன் அணுகுபவர்கள் தம்மை மட்டுமல்லாது அச்சமூகத்தின் அதன்பின்வரும் பெரிந்தொகையான மக்கள் கூட்டத்தையும் கருத்தியல் சிதைவுக்கு உள்ளாக்குகின்றார்கள் என்ற 'உண்மை' தெரியாமல் இருக்கின்றார்கள் என்பது வருத்தத்திற்குரியது. தமது சுய விருப்பு வெறுப்புகள் எழுத்தின் மீது கவியும் போது ஆரம்பிக்கும் நச்சுச்சூழல் அதன்பின்னே வருகின்ற அனைவருடைய மனதிலும் நஞ்சை வளர்த்துச் செல்லும் என்பது தெரியாமல் போவது துரதிஸ்டமானது. இவ்வகையான கட்டங்களைத் தாண்டியதாக புதிய தலைமுறை இருக்க வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாக இருக்கின்றது. இதனைக் கருத்தியல் ரீதியாகச் சாத்தியமாக்க எழுத்தாளர்களுடன் உரையாடலை ஆரம்பிக்க வேண்டி இருந்தது. தற்போதைய இணையத் தொழில்நுட்பம் அதைச் சாத்தியமாக்கிய மிகவும் உதவி புரிந்தது எனக்கூறமுடியும்.

எமது 18 உரையாடல்களும் தத்துவம், அரசியல், சமூகவியலுடன் இணைந்த தொழில்நுட்பம் என்றவாறாகப் பல்வேறுபட்ட புள்ளிகளைக் கடந்து சென்றபோதிலும் அதன் மையச்சரடாக இருப்பது சமூகக்கருத்தியல்களைத் தீர்மானிக்கும் தத்துவத்துடன் தொடர்பான பரப்பே. சமூகக்கருத்தியலைத் தீர்மானிப்பதிலும் அதனி மாற்றியமைப்பதிலும் குறித்த மொழியில் அமைந்த எழுத்திற்குப் பெரும்பங்குண்டு. அதனை எழுதுபவர்களினது மனநிலையே சில மாற்றங்களை வேண்டி நிற்கும் நிலையில் நாம் வாசகர்களுடன் உரையாடுவதிலும் பார்க்க எழுத்தாள்ர்களுடன் உரையாடப் பெரிதும் விரும்பினோம். எமது ஆரையாடல்கள் மூலம் எழுத்தாளர்களின் மனநிலையில் சிலவகையான மாற்றங்களை ஏற்படுத்துவது மாத்திரமன்றி உரையாடலை அவதானிக்கும் வாசகனுக்கும் ஒற்றைப்பரிமாணம் தவிர்ந்த தளத்தில் எண்ணச்சிதறல்கள் ஏற்படும் என்பது எமக்கான நம்பிக்கையாக இருந்தது. கருத்தியலில் செயலற்ற நிலை (Deadlock) என்பது பலூன் மாதிரியானது. இயங்குகைக்கான பெருமளவுசக்தியைத் தேக்கியவாறு தன்னை இறுக்குக்கொண்டிருப்பது. அதன்மீது விழும் சிறிய ஊசிக்குத்து ஒன்று அதனை சிதறடித்துவிடப் போதுமானது. எமது உரையாடல்கள் எழுத்தாளர்களுடன் நிகழ்ந்த போதிலும் Deadlock நிலையைக் கடந்தவர்கள் வாசகர்கள் என்பது வியப்பானது. வாசகர்கள் புதிய மனத்துடன் உரையாடலை அணுகுவார்கள். அவர்களிடன் எதுவித முன்முடிவுகளும் இருக்காது. அவர்கள் அச்சூழலை இலகுவாகக் கடப்பார்கள். எழுத்தாளர்களுடன் எமக்கு நிகழ்ந்த உரையாடல்கள் வாசகர்கள் சிலகட்டங்களைத் தாண்டிப் போக உதவியது என்பதை நாம் சிலருடனான உரையாடல்களில் கண்டிருக்கிறோம். ஆயினும் சில எழுத்தாளர்கள் எமது உரையாடல்மூலம் பலவிடயங்களை உள்வாங்கிய போதிலும் எதுவித மாற்றமும் அற்று அன்றுபோல் என்றும் வீற்றிருப்பது எமக்கு மகிழ்ச்சியான விடயம் அல்ல. அவர்களை நினைத்தல்ல, அவர்களைத் தொடரும் சூழலையும் அதன்மீது கவியப்போகும் 'இருளை'யும் நினைத்தே எமது கவலை.

15 மாதங்களுக்கு முன்பு இருந்ததை விடத் தற்போது ஆக்கபூர்வமான உரையாடல்கள் அதிகரித்திருக்கின்றது. அதுமட்டுமல்லாது கருத்தியல் சூழலும் மாறியிருக்கின்றது. முன்பிருந்த இறுக்கமான கருத்தியல் சூழலில் சற்று நெகிழ்வு ஏற்பட்டிருப்பது போன்று உணர்கின்றோம். நாம் உரையாடத் தொடங்கியதன் நோக்கம் சிறிதளவு நிறைவேறியிருக்கின்றது என்பது மகிழ்ச்சியான செய்தி. எமது உரையாடல் தான் இச்சூழலை மாற்றியது என்ற புருடா கதைகளை முன்வைப்பது எமது நோக்கமல்ல. ஆயினும், எமது உரையாடல் சூழலின் மாற்றத்திற்கு சிறிதளவில் பங்களித்திருக்கும் என்ற நம்பிக்கை எம்மை மேலும் பரவலாக உரையாட வைக்கும். அந்த அளவில் அவ்வகை நம்பிக்கைகளை எமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம். நாம் தனிப்பதிவு ஆரம்பித்து ஒற்றைப் பரிமாணத்தில் எழுத்துக்களை உருவாக்கி அதனைப் பாராட்டிவரும் பின்னூட்டங்களை அனுமதித்து ஆனந்திக்கும் மனநிலை எமக்கெப்போதும் இருந்ததில்லை. கவர்ச்சிகரமாக (துன்பகரமாக?) எழுத்துக்களைப் பிரசவித்து ரசிகன்/ரசிகைளைத் தேடி பேசி இன்புற்றிருக்கும் மனநிலையும் எம்மிடம் இருந்ததில்லை. எம்மைப் பெரிய பிம்பமாகக் கட்டமைத்து சுயதிருப்திக்குள்ளாகி வாழும் மனநிலையும் எமக்கில்லை. மாறாக, எழுத்தாளர்களுடன் உரையாடலை ஆரம்பித்து அனைத்துவகையான ஒற்றைப்பரிமாண சூழல்களையும் தகர்க்த்தெறியும் மனநிலையும் பெருவிருப்பும் எம்மிடம் இருந்தன. தனித்தளம் வைத்திருந்து எழுத்தைக் காட்சிப்படுத்துவதன் ஊடாக சமூககருத்தியல் மாற்றத்தை விரைவாக எதிர்பார்க்க முடியாது. அது மிகமெதுவானது. மீறல்களை அனுமதிக்கும் இயல்பை அவற்றினூடு இலகுவாக வளர்த்துக்கொள்ளமுடியாது. ஆனால், உரையாடல்கள் அவ்வாறில்லை. அவை தேக்கம் என்பதை இல்லாமல் செய்யக்கூடியவை. உரையாடல் என்பது குளத்தில் நீச்சல் அடிப்பது போன்றது. நீச்சல்களின் பெருக்கத்தில் குளம் காணாமல் போய்விடும். நீச்சல் மட்டுமே வெளித்தெரியும். ஒருவர் மூழ்கும்போது மட்டுமே குளமும் அதன் ஆளமும் வெளித்தெரியும். குளத்தின் ஆழத்தை இல்லாமல் ஆக்க முடியாது. ஆனால், நாம் குளத்தை இல்லாமல் ஆக்குகின்றோம். எமது நீச்சல் நிகழும் இடத்தில் குளம் காணாமல் போய்விடுகின்றது. நீச்சல் மட்டுமே எஞ்சி நிற்கின்றது. குளம் தனது ஆளத்தைப் பறைசாற்ற வளர்த்து நிற்கும் தாமரைச் செடிகள் எமக்குப் பொருட்டல்ல. அவற்றைக் கண்டு நாம் எப்போதும் அஞ்சியதுமில்லை.

இனி, நாம் நிகழ்த்திய உரையாடல்களை மீள்வாசிப்பு செய்ய நினைக்கின்றோம். எமது உரையாடல்களே குளமாகி பற்வைகளைத் தம்மிடம் வரவழைக்கின்றன. அதை நீச்சல்குளமாக மாற்ற வேண்டிய பொறுப்பு எமக்கு நிச்சயமாகவே உண்டு. எமது உரையாடல்களின் மீள்வாசிப்பினூடே எம்மோடு உரையாடியவர்கள் பற்றிய விபரங்களையும் பார்த்துச் செல்வோம்.

பிற்குறிப்பு:
இங்கே, மொழியின் துவித எதிர் இருமையை எம்மால் கடக்க முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்கின்றோம்.

Footnotes.
1. http://www.ischool.utexas.edu/~palmquis/courses/discourse.htm
2. http://www.nationmaster.com/encyclopedia/Binary-opposition
3. http://murugan.org/research/zvelebil-tamil_traditions-intro.htm
4. http://en.wikipedia.org/wiki/Deadlock

0 comments: