இவ்வுரையாடல் அலைஞனின் அலைகள் என்னும் தளத்தில் இரயாகரனுக்கு மேலதிகமாக ஒரேயொரு கேள்வி (அல்லது வேண்டுகோள்) என்னும் பெயரிலியின் பதிவில் இடம்பெற்றது.
இவ்வுரையாடலில் இரயாகரன் பங்குபற்றாத போதும் அவரை மையமாக வைத்தே உரையாடல் ஆரம்பமாகியது. இவ்வுரையாடலில் இரயாகரனுடனான ஊடாட்டம் எமக்கு முக்கியமானதாக இருந்தது. இதில் இருந்து புதியவகையான புள்ளிகளை உருவாக்க வேண்டிய தேவை அவசியமாகப்பட்டது. இவ்வுரையாடலின் பின்பு ஏதோவொரு விதத்திலான இரயாகரனின் இருப்பின் அவசியத்தை நாம் உணர்ந்து கொண்டபோதும் நிலையாக வரையப்பட்ட தளத்தில் இருந்தான மாற்றமற்ற கருத்துக்களின் போதனை சமூகத்திற்கு வேறுவகையில் பின்னடைவு என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டி இருந்தது. பொருளாதார அடிப்படையை மட்டும் வைத்து கருத்தியல்களை வளர்த்தெடுப்பதையும் சிதைப்பதையும் நாம் கடந்திருக்க வேண்டும். அனைத்துச் செயற்பாடுகளையும் பொருளாதார மையமாக யோசிக்கமுடியும் அணுக முடியும் என்ற கருத்தாக்கத்தில் இருந்து லெனினே விடுபட்டிருந்தார் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும் என நினைக்கின்றேன். அதற்கருகான புள்ளிகளினது வேறுவகையான அணுகுமுறைகளினதும் தேவை மறுக்கப்பட முடியாதது. வர்க்கப் புரட்சியின் ஆரம்பத்திற்கு பொருளாதார மைய அணுகுமுறையின் அவசியம் ஜேர்மன் மற்றும் சோவியத்யூனியனில் அவசியப்பட்டதை யாரும் மறுக்க முடியாது. ஆயினும், புரட்சியின் நீட்சிக்கும் அதன் தொடர்ச்சிக்கும் மாறுபட்ட அணுகுமுறைகள் அவசியமாகின. சனாதன மார்க்சியவாதிகள் அதன்பின்னரும் மார்க்சிய நூல்களுக்குள் அனைத்தையும் கண்டுபிடித்துவிடலாம் எனத்தேடித்திரிந்தது எவ்வகையான விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.
மார்க்சியப் பொருள்முதல்வாதம் பொருளாதார மையமான தத்துவம் என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. உலகின் அனைத்துவகையான போக்குகளையும் பொருளாதார மைய அரசியலை வைத்து 'விளக்கி' விடவும் முடியும். அவை அவை வெறும் விளக்கமாகவும் சுயதிருப்திக்கான கண்டுபிடிப்புகளாகவும் மாத்திரமே எஞ்சிப்போகும் அபாயம் இருப்பதை சுட்டிக்காட்ட வேண்டிய தேவை உள்ளது. அவை ஒற்றைப்பரிமாணமான கருத்தியல் கட்டுமானம் என்பதில் மாற்றுக்கருத்திருக்க முடியாது. அவற்றின் 'முக்கியத்துவத்தில்' அல்லது 'மையப்படுத்தலில்' மறைந்திருக்கும் புள்ளிகளை வெளித்தெரிய வைக்கவேண்டிய தேவை அனைத்துவகையான அறிவுஜீவிகளுக்குமானது. தேங்கும் ஒற்றைப்போக்கென்பது பாசிசத்தை உருவாக்கும் புள்ளி என்பதை நாம் நம்புகின்றோம். உடைப்புகள் என்பது எப்போதும் பொருளாதார மேலாதிக்கத்திற்கு மாத்திரமானதல்ல. அவை பலதளங்களிலும் நிகழ அவற்றிற்கு சுதந்திரம் உண்டு. பொருளாதார மையப்புள்ளிக்கு மேலதிகமாக வேறுபுள்ளிகளில் நிகழும் உடைப்புகளை நாம் இலகுவாக பொருளாதார அடிப்படையை வைத்து நிராகரித்துவிட முடியாது. பலவகையான புள்ளிகனின் இருப்பையும் நாம் மறுதலித்து விட முடியாது. ஒற்றைமைய சார்பியல் பார்வை என்பது விலக்கும் புள்ளிகளை உருவாக்குவது. அவற்றின் விலக்கல்களையும் ஒடுங்கல்களையும் பொருளாதார மைய பார்வையை வலியுறுத்துவோர் எதிர்கொண்டே ஆக வேண்டும். (இதுபற்றிய விரிவான பார்வைகளை வேறு உரையாடல்களில் பார்ப்போம்.) இராயகரனின் பார்வைக் கட்டுமானத்தை விளக்கவே நாம் மேற்கூறிய விடயங்களைக் கூறவேண்டி இருந்தது. அவரது பார்வைக் கட்டுமானம் என்பது பொருளாதார மைய அரசியலுக்கு மிக உகந்தது. ஆயினும் அதில் இருந்து மாறுபட்ட புள்ளிகளையும் வேறு தொடர்ச்சிகளையும் தனது பார்வைக் கட்டுமானம் சார்ந்து நிராகரித்து நிற்பதுதான் வேதனையானது. உலகை ஒற்றைத் தொலைநோக்கியால் பார்த்துவிட முடியாது.
இனி, இரயாகரனது பதிவை முன்வைத்து சிலவிடயங்களைக் கூற நினைக்கின்றோம். இராயகரன் மக்கள் நலன் என்ற தளத்தில் இருந்து தனது உரையாடலை நகர்த்திச் செல்கின்றார். அவர் வேண்டுகோள் விடுக்கும் மக்களில் குறிப்பிட்ட சதவிகத்திலானோர் புலிகளை ஆதரிப்போர். ஆதரிக்காதவர்களில் பெரும்பாலோனோர் பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராக புலிகளை விட வேறு மாற்றுச் சக்தி இல்லை என்று நம்புபவர்கள். குறைவான சதவிகிதத்திலானோர் புலிகளை மாற்றுக்கருத்தின்றி எதிர்ப்பவர்கள். நிரந்தரப் புலி எதிர்ப்பாளர்களில் குறிப்பிட்ட சதவிகிதத்திலானோர் பேரினவாதம் தனது இருப்பை நியாயப்படுத்தும் நோக்கில் வழங்கும் சலுகைகளைப் பெறுபவர்கள். மிகுதி எதிர்ப்பாளர்களில் பெரும்பாலானோர் புலிகளால் பலவிதத்திலும் பாதிக்கப்பட்டவர்கள். பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்கள், அதிகாரம் பறிபோனவர்கள், சகோதரங்கள் சொந்தங்களை இழந்தோர், (புலிகளால் சுடப்பட்டு) தெளிவான எதிர்காலத்திட்டத்துடன் நகரமுடியாமல், ஓரிலக்கை மட்டுமே வைத்து நகரும் புலிகள் போன்ற இயக்கத்தினர் அரச இயந்திரத்திற்கு எதிராக போராடும் போதான மக்கள் எதிர் நிலைப்பாடுகளால் நொந்து போன சமூகத்தினர் இவ்வகைக்குள் வருகின்றனர். இங்கே, நான் சொல்ல வருவது இராயகரன் நிற்கும் தளத்தில் நின்றவாறு புலிகளை எதிர்ப்பவர்கள் மிகக்குறைவான சதவிகிதத்தினரே.
நிராகரிப்பின் அரசியலின் காலம் முடிவடைந்து விட்டது. எதையும் முற்றாக நிராகரித்து செய்யப்படும் அனைத்து அரசியல்களும் வெவ்வேறு பார்வைகளில்- ஒவ்வொன்று சார்பாகவும்- நிராகரிப்பு அரசியலாகவே கொள்ளப்படும் அபாயக்காலகட்டம் இது. வித்தியாசங்களின் பெருக்கத்தில் ஒடுக்கப்படும் வர்க்கம் மாத்திரமல்ல ஒடுக்கும் வர்க்கமும் சேர்ந்தே பிளவுற்றுப் போய்விட்டது. அவற்றிகு இடையே முதலாளித்துவம் தன்னை வாழவைத்தவாறேயிருக்கிறது. உலகசந்தையின் வடிவம் மாறிவிட்டது. புதிய வடிவத்திற்குள் முதலாளித்துவம் தன்னைப் பொருத்தியிருக்கிறது. இங்கே, முதலாளித்துவத்தின் தெளிவான வரைபடம் எம்மிடம் இல்லை. அதற்கான தெளிவான வரைபடம் வரும் போது மாத்திரமே புதிய வர்க்கத்தை அடையாளப்படுத்த முடியும். அதை மீளுருவாக்கம் செய்து வெளிப்படுத்த முடியும் என நம்புகின்றனர் நவ மார்க்சியர்கள். இங்கே, நான் சொல்ல வருவது இதில் இருந்து இன்னும் வித்தியாசப்பட்டது. தேசியவாதக் கருத்தியலும் அதற்குப் பின்னர் சோசலிசப் பெண்ணியம் என்னும் கருத்தியலும் வளர்ச்சிபெற்ற போது அக்காலத்தைய மார்க்சியர்கள் அதை இலகுவாக ஏற்றுக்கொள்ளவில்லை. அக்கட்டத்திலேயே, எதிர்காலம் பிளவுக்கான காலம் என்பதை உணர்ந்து மார்க்சியர்கள் செயற்பட்டிருக்க வேண்டும். இன்று மார்க்சியர்கள் பின்னமைப்பியல்வாதிகளை மார்க்கிய விமர்சகர்களாக மார்க்கியத்திற்கு புத்துணர்ச்சி ஊட்டியவர்களாகக் கொள்ள முடிகின்றது. ஆயினும் நாம் இன்னமும் இது குழப்பவாதத்தில் முடியும் என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். பிளவின் பின்பான காலத்தில் எதையும் ஒன்றிணைக்க முடியாது மார்க்கியர்கள் திண்டாடுவதில் பிரயோசனம் இருக்கப்போவதில்லை. பிளவை வகைதொகையற்று ஏற்றுக்கொள்ளும் போதும் அங்கீகாரத்தின் சமநிலைக்கு சமூகம் தன்னை தற்காலிகமாக நிலைநிறுத்த எத்தனிக்கும். அக்கட்டத்தில் சில ஒத்த புள்ளிகளைக் கண்டடைய முடியும். பிளவுகளுக்குள் இயங்குவதற்கான மனநிலையை வளர்த்துக்கொள்வது தான் எம்முன் உள்ள தெரிவே தவிர மாறாக பிளவை எதிர்ப்பதும் அதனை மறுதலிப்பதும் அல்ல. நிராகரிப்பு அரசியலின் காலம் தன்னை முடித்துக்கொண்டு விட்டது.
தமிழீழ விடுதலைப்புலிகள் என்னும் இயக்கத்தின் இருப்பை மறுத்து எதுவும் செய்துவிட முடியாது என்ற நிலையில் இருந்து மட்டுமே அதனுடன் தொடர்புபட்ட மக்களை அவர்களின் அரசியலை மேற்கொள்ள முடியும். மாறாக நாம் நிராகரிப்பின் அரசியலில் இருந்து என்ன செய்தாலும் அதுவும் மக்கள் விரோதமானதே. இராயகரன் எதிர்க்கும் புலிகளின் அழிவின் பின்னர் சமூகத்தில் இருந்து அந்நியப்படப்போகும் சமூகக்கூட்டம் மக்கள் இல்லையா. புலிகளுடன் சேர்ந்து சமூக நோக்கோடு யாரும் வேலை செய்துவிடவில்லையா? அவர்களையும் நாம் பாசிஸ்டுகள் எனக்கூறி நிராகரிக்கும் காலம் கடந்துவிட்டது. நாம் எப்போதும் ஒரேகருத்தில் இருப்பதென்பதே ஒருவித பாசிச நிலைதான். சூழல் என்பது எப்போதும் மாறுவது. அதற்கேற்றவாறு எம்மை மாற்றிக்கொள்ள முடியாவிட்டால் நாம் ஏதோவொருவிதத்தில் அந்நியமாகி நிற்கின்றோம் என்பதே பொருள். நாம் வளர்க்கும் நிராகரிப்பின் கருத்தியல்வெளிக்குள் அகப்பட்ட மக்கள் கூட்டம் என்பதும் எமது நேசத்திற்கு உட்பட்டதே. இராயகரன் ஆசைப்படும் புலிகளின் அழிவு என்பது ஒருவகையில் அவர் நேசிக்கும் மக்கள் கூட்டத்தின் அழிவுதான். அதை அவர் எப்போதும் விளங்கிக் கொள்ளவில்லை என்பது எமக்கு மிகவும் துயரமானது.
மக்கள் சார்பு என்பது எப்போதும் நிரந்தரமான கருத்தியல் அல்ல. அது யாந்திரிக வடிவமும் அல்ல. அது காலத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றக்கூடியது. காலத்திற்கு ஏற்றவாறு தனது கருத்தியலைக் கூட மாற்றக்கூடியது. நாம் ஒரே கருத்தியலில் இருந்தவாறு பார்க்கும் பார்வை என்பதே கூட மக்கள் எதிர்நிலைப்பாடாக இருக்கலாம். மேலும், பொருளாதார அடிப்படை சார்ந்தே மக்கள் பார்வை என்பது பன்மையிலானது. ஒன்றுக்கொன்று முரணான பார்வைகளை வழங்கும் மக்கள் கூட்டம் எமக்கும் முன் இருப்பதில் நாம் வியப்படையத் தேவை இல்லை. முரண்களுக்குள் இயங்கவேண்டிய சந்தர்ப்பங்களுக்காக எமது மனதை தயார்நிலையில் வைத்திருக்கவேண்டும். மக்கள் நிலைச்செயற்பாடு என்று கூறிக்கொள்பவர்கள் கூட அவற்றை தெளிவாக விளங்கிக்கொண்டவர்கள் அல்ல.
மக்கள் அரசியல் என்பதை நாம் எப்போதும் யாந்திரிகமாகக் கட்டமைத்து வைத்திருக்க முடியாது. ஈழத்து மக்களினதும் அதைச்சுற்றியுள்ள மக்களினது மனநிலை தொடர்பாக நாம் நிறைய ஆய்வு செய்ய வேண்டும். மார்க்சிய- பொருளாதார அடிப்படையை முன்னிறுத்தித் தீர்மானிக்கப்படும் மக்கள் அரசியல் பார்வை என்பது மிகவும் குறுக்கலாக, 'மக்கள்' நிராகரிக்கும் பார்வையாக அமைந்துவிடும் ஆபத்து உள்ளது. மார்க்சிய-லெனினிய அடிப்படையிலான கருத்தியல் மூலம் கட்டமைக்கப்பட்ட இராயகரனின் பார்வை என்பதை நாம் இவ்விடத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது. அதன் போதாமைகளை முன்னிறுத்தி அதற்குப் பின் மார்க்சியர்கள் நீண்ட தூரம் பயணம் செய்துவிட்டார்கள். இராயகரனின் பார்வையில் உள்ள அடிப்படைகளின் நியாயங்களை எவராலும் மறுக்கவே முடியாது. ஆயினும் தன்னை மாற்றியமைக்க முயற்சிக்கும் மார்க்சியத்தொடர்ச்சியை அவர் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். அல்லது குறைந்தபட்சம் போஸ்ட் மார்க்சிய உரையாடல்கள் ஏன் நிகழ்கின்றன என்றாவது அவருக்குள் கேள்விகள் எழ் வேண்டும். இங்கே, மேற்கினது போஸ்ட் மார்க்சிய சிந்தனைகள் கூட எமது சமூகத்திற்கு எவ்வாறு பொருத்தப்பாடாக உள்ளது என்ற கேள்வி எமக்கு முக்கியமானது. போஸ்ட் மார்க்சியர்களினது பெரும்பாலான உரையாடல்கள் அமெரிக்க-ஐரோப்ப மையவாத சமூகப் பரப்புகள் தொடர்பான உரையாடல்களே. இராயகரன் குறைந்த பட்சம் இந்திய மார்க்சியரான இஜாஸ் அஹமட் இனது பிரதிகள் பற்றியாவது தனது உரையாடல்களைத் திசைதிருப்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பே மிகுதியாகி நிற்கின்றது.
அமெரிக்க-ஐரோப்ப மைய வாத போஸ்ட்-மார்க்சிய உரையாடல்களில் இருந்து நாம் எடுத்துக்கொள்ளும் விடயங்கள் தவிர்த்து எமக்கு முக்கியமான விடயமாகப்படுவது கிராம்சிய அடிப்படை மார்க்சியம் ஆகும். மூன்றாமுலக நாடுகளினது முக்கிய பிரச்சனைகளில் ஒன்று ஏகாதிபத்தியப் பிரசனைகள் ஆகும். தென்னமெரிக்க, ஆபிரிக்க, ஆசிய நாடுகளினது மார்க்சியத்தை வரையறுக்க வேண்டிய தேவை எமக்கு முன்னுள்ள கடமையாகும். இதனை இராயகரன் நிச்சயமாக புரிந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றோம். தென்னமெரிக்க நாடுகளினது போராட்டங்களில் இருந்து நாம் எமது கருத்தியலுக்குத் தேவையான விடயங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் இடதுசாரியத் தேசியத்தை முன்னிறுத்தியவாறு நகர்ந்த விதம் பற்றிய தெளிவு எமக்கிருக்க வேண்டும். அங்கே இருந்த சர்வதேசியவாதிகள் எவ்வாறு அதற்கெதிராகச் செயற்பட்டார்கள் என்றதெளிவையும் நாம் பெற்றுக்கொண்டே ஆகவேண்டும். அவ்வாறே வர்க்கம் என்பதை முறையாக வலுப்படுத்த முடியாத ஆபிரிக்க சமூகத்தில் மார்க்சியத்தை அதேமாதிரி நடைமுறைப்படுத்த முயற்சிக்கக் கூடாது. இங்கே கறுப்பு மார்க்சியத்தினதும் ஆபிரிக்க மார்க்சியத்தினதும் சில வரையறைகளையும் நடைமுறைகளையும் நாம் நிச்சயமாக அறிந்துகொள்ள வேண்டும். அவ்வாறே ஆசிய பரப்புகளில் மார்க்சியத்தில் செயற்பாடுகளை நாம் வரையறுக்க வேண்டும். மார்க்சியத்தின் இவ்வகையான பிளவும் பிளவனுமதிப்பினூடான ஒன்றுபடுதலும் மட்டுமே சர்வதேசியக் கருத்தியலை பலப்படுத்தும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. இராயகரன் இதனை அறிந்துகொள்ளும் போது மாத்திரமே அவரது மக்கள் அரசியலை உண்மையாக மேற்கொள்ளுவார். அல்லது மார்க்சியத்தின் போதாமைகளினூடாக தம்மை வலுவாக நிலைநிறுத்த எத்தனிக்கும் முதலாளித்துவத்திற்கு சார்பாக அவர் மறைமுகமாக இயங்குவதை அவர் எப்போதுமே அறியப்போவதில்லை. நாம் இராயகரனிடம் இருந்து எதிர்பார்ப்பது ஈழத்து மார்க்சியம் தொடர்பான அவரது பிரதிகளையே தவிர சர்வதேசியப் புரட்சிகளினது பதாகைகளை அல்ல. ஈழத்து மார்க்சியத்தை பற்றிய வரையறைகளை அவர் உருவாக்கத் தொடங்கும் போது அவர் தனது முற்சாய்வுகளைக் களைந்தே ஆகவேண்டும். முற்சாய்வுகளில் இருந்து மக்கள் சார்பான அரசியலை மேற்கொண்டுவிட முடியாது என்பதை யார்தான் அவருக்குச் சொல்லிவிட முடியும். பிரபாகரன் எவ்வாறு கதவுகளை இறுகச் சாத்தியவாறு நிற்கான்றாரோ, அதைவிட மேலதிகமாக இராயகரன் கதவுகளை மாத்திரமல்லாது படலையையும் சேர்த்தே சாத்தியவாறு நிற்கின்றார். இதுதான் மக்கள் விரோதத்தின் பக்கம் என்பதை அவருக்கு எவ்வாறு விளங்கப்படுத்துவது என்பதுதான் எனக்கு முன்னுள்ள மிகப்பெரிய கேள்வி.
இரயாகரனை நோக்கி பெயரிலி கேட்ட கேள்விகளில் எம்மால் சில உடன்பாடுகளை எட்ட முடிந்தாலும் அவர் இரயாரனை ஆதரிக்கும் காரணங்கள் பலவற்றில் எம்மால் உடன்படமுடியவில்லை. விஸ்வானந்த தேவரின் கருத்துக்களை காப்பாற்றுவதென்பது நாம் பிறப்பதற்கு முன்னர் 25 வருடங்களுக்கு முன்னர் அவர்கூறிய கருத்துக்களை காவித்திரிவதல்ல. மாறாக அதனைச் செழுமைப்படுத்துவதே என்பதே இராயகரன் மீது நாம் காணும் குறையாக இருக்கின்றது. பிரெஞ்சுப் புரட்சியில் பிரெஞ்ச் கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த நிலைப்பாடுகளில் இருந்தும் அதன் வெளியில் இருந்தும் வலதுசாரிய அரசியல் தன்னை நிரப்பிக் கொண்டதை நாம் மறந்துவிட முடியாது. கருத்துக்களை இறுக்கமாகப் பற்றி நிற்பதே பாசிச நிலையாகும். தனது கருத்துக்களை மாற்றத்திற்கு உட்படுத்தாதவன் தான் உண்மையான பாசிஸ்ட் ஆவான். லெனின் தேசியம் தொடர்பான கருத்தியல்களை முன்னெடுத்த போது மார்க்சிய வெறியர்கள் இருக்கவில்லை என நினைக்கின்றேன். இருந்திருந்தால் லெனினை அன்டி-மார்க்சிஸ்ட் என முத்திரை குத்தி அடித்திருப்பார்கள். அவ்வாறே இன்றைக்கு சர்த்தர் நவ மார்க்சியர்கள் கொண்டாடப்படுகின்றார். இருத்தலியம், இருத்தலிய மார்க்சியம் எனப் பணிவன்போடு அழைக்கப்படுகின்றது. அவ்வாறே பின் மார்க்சியர்களை இன்றைய மார்க்சியர்கள் சிலர் ஏற்றுக்கொள்ளத்தலைபடுகின்றார்கள். தெரிதாவை மார்க்சியத்தை வளப்படுத்தியவர் எனச் சொல்லும்பார்வை கூட நவ மார்க்சியர்களிடம் வந்திருக்கின்றது. ஆக, மார்க்சியத்தை எதிர்த்தே சமூக தத்துவ மரபு வளரவேண்டியிருப்பதாக இருக்கும் இப்போக்கு எவ்வளவு கேவலமானது என்பதை மார்க்சிய அடிப்படைவாதிகள் விளங்கிக்கொள்ளப் போவதில்லை.
இவ்வாறே, இலங்கையில் தேசிய இனவிடுதலைப் போராடத்தின் ஆரம்பத்தில் மார்க்சியர்கள் எடுத்த நிலைப்பாடுகளை இராயகரன் அறியாமல் இருக்கப்போவதிலை. விச்வானந்த் தேவன் சனாதன மார்க்சியர்களுடன் தான் பிரச்சனைப்பட்டார். தேசியமறுப்பு மார்க்சியர்களுடனான பிரச்சனையின் பின்புதான் அவரால் புதிய கருத்தியலின் பக்கம் சாய முடிந்தது. அந்நேரத்தில் ரஷ்ய சார்பு மார்க்சியர்கள் எடுத்தநிலைப்பாடுகளை மல்லிகை இதழ்களில் இருந்து நாம் விபரமாக அறிந்துகொள்ள முடியும். இதுதான் மார்க்சியர்களின் வரலாறு. மார்க்ஸ் என்ற மக்கள் நலனுக்காக அறிவுழைப்பைச் சாத்தியமாக்க்கிய பேராசான் இவற்றை அனுமதிப்பாரா என்பதைக் கூட மார்க்சிய மதவாதிகள் உணர்ந்துகொள்ளப் போவதில்லை.
இன்று அமைப்பின் பெயர்களை வைத்தே அதனை என்.ஜீ.ஓ வா இல்லையா என தீர்மானிக்குமளவிற்கு மார்க்சிய வாரிசுகள் வளர்ந்துவிட்டார்கள். சில சமன்பாடுகளின் மூலம் அனைத்துவகையான பிரச்சனைகளுக்கும் தீர்வுகாணும் வசதியை நமது இன்றைய புதிய 'மார்க்சியர்கள்' பெற்றிருக்கின்றார்கள். அவ்வகையான ஒருவர்தான் மார்க்சியத்தின் அடிப்படை கூடத் தெரியாதது மட்டுமல்லாது அதனை அறிந்துகொள்ள எதுவித முனைப்புமற்ற மயூரன் என்னும் பேர்வழி. மயூரனினது கருத்தியல் தெளிவை மேற்கூறிய உரையாடலில் நீங்கள் அறிந்துகொள்ள முடியும். மயூரன் கூறுகிறார் "மார்க்சீயத்தை கருவறுப்பது எப்படி என்று இரவுபகலாக சிந்திப்பதும் பண்பாட்டின் உதிரிகளாய் அலைவதும்தான்." இதைத்தான் சர்த்தர் காலத்திலேயும் அமைப்பியலின் காலத்திலேயும் பிரெஞ்சு மாணவர் புரட்சியின் போதும் சரி தற்போது பிரசண்டவின் நேபாள மார்க்சியத்தினை கட்சிக்குள்ளேயே மறுதலிக்கத் தொடங்கியுள்ள சில மார்க்சியர்களும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
சோவியத் யூனியனின் உடைவை ஜனநாய சக்திகளின் வெற்றியாகவும் அதற்குப் பின் மார்க்சியத்தைச் செழுமைப்படுத்த வேண்டிய வரைக்கும் உரையாடும் போஸ்ட் மார்க்சியர்களை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. ஆனால், மயூரன் போன்ற ஈழ்த்து இளைய விடிவெள்ளிகள் சனாதன மார்க்சியர்களிடம் கடன்வாங்கிய அதே மனநிலையைத் தக்கவைத்து தம்மை சமூகத்தில் பலமாக நிறுவிக்கொள்கின்றனர். மார்க்சியர்கள் மீதான விமர்சனத்திற்கு "ஆட்சியில் அமெரிக்கா உங்கள் கைகளில் நாசிசத்தின் மூலவர்களின் கோட்பாட்டுப்புத்தகங்கள்" என்று இலகுவாகக் கூறி தமது மேதமையை நிலைநாட்டிக் கொள்கின்றனர். இதுதான் இவர்களது 'எப்போதுக்குமான' பதிலாக இருக்கிறது. இவர்களுக்கான தொடர்ச்சி என்பதில் பலர் இவர்களுக்கு பின்னாலே நிற்கக் கூடும். வாரிசுகள் உருவாக்குவதென்பது எதிர்காலத்தில் தமது கருத்தியலைக் காப்பாற்றுவதற்காக அல்ல. மாறாகச் செழுமைப்படுத்துவதற்காகவே என்பதை எப்போதும் உணர்ந்துகொள்ளாதவர்களும் நிலைப்பட்ட கருத்தியல் மூலம் சமூகத்தைத் தேங்கிப்போகச்செய்பவர்களும் மக்கள் அரசியல் செய்பவர்கள் அல்லர். அவர்கள் மக்கள் எதிர் அரசியல் செய்பவர்களே.
உரையாடல் - 1 இராயகரனை நோக்கி முன்வைக்கப்பட்டதாயினும் அதன் தொடர்ச்சித்தடத்தில் அதே வழியில் தன்னை நிலைநிறுத்த எத்தனிக்கும் மயூரனும் வந்து கலந்து கொண்டது உரையாடலை இன்னும் சிறப்பாகச் செய்ய உதவியது. இங்கே சமூகப்பகுப்பாய்வு மற்றும் தத்துவமரபிலான அவர்களது போதாமைகள் மட்டுமல்லாது அரசியல் தத்துவ ரீதியாக அவர்கள் காவித்திரியும் போதாமைகள் தொடர்பாகவும் எமது கவனம் அமைந்தது. இவ்வுரையாடலின் பின்பும் இருவருமே தமது கருத்தியலை சிக்கெனப்பற்றிப் பிடித்திருப்பதை அவர்களது எழுத்தின்வழி நாம் கண்டவாறே இருக்கின்றோம். இராயகரனாவது வாழ்க்கையின் நடுப்பகுதியைக் கடந்தவர். ஆயினும் மயூரன் தனது இளம்வயதில் போதாமைகளை வைத்திருப்பது எமது எதிர்காலச் சமூகத்தை எவ்வாறு பாதிக்கப் போகின்றது என்பதாக இன்றும் எமது கவனம் செலுத்தப்படுகின்றது.
இராயகரன் என்ற மனிதனின் தனிப்பட்ட சமூக அக்கறை தொடர்பாக எம்மகுள்ளது மிக மிக உயர்வானது. அவர் சலூகைகளுக்கும் ஆதிக்க உணர்வுக்கும் அடிபணிபவர் அல்லர். ஆனால், அவரது சமூக அக்கறையும் அதன் தீவிரத் தன்மையும் எவ்வாறு சமூக விரோதமாகின்றது என்பதை நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருக்கின்றோம். இவ்விடத்தில் மயூரனை இராயகரன் இடத்தில் வைத்துப் பார்க்க முடியாது என்பதையும் சொல்லவேண்டியிருக்கிறதென்பதில் வருத்தப்படுகின்றோம். மார்க்சியத்தை - அதன் உயிர்ப்பை இவர்களிடம் இருந்து காப்பாற்ற நாம் தொடர்ச்சியாகக் கருத்தியல் தளத்தில் செயற்படவேண்டியிருக்கிறது. ஏனெனில் இவர்களது சனாதனக் கருத்தியல்களின் மூலமே இன்று முதலாளித்துவம் உயிர் வாழ்கின்றது. இதுதான் எமது இன்றைய நிலைப்பாடு.
Thursday, January 22, 2009
உரையாடல்- 1 (இரயாகரன், பெயரிலி, மயூரன், அமீபா) - [[ மீள்வாசிப்பு ]]
Posted by Unidentified Space at 7:30 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment