Thursday, January 22, 2009

உரையாடல் - 2 (பெயரிலி, அமீபா, சிறீரங்கன்.) - [[ மீள்வாசிப்பு ]]


இவ்வுரையாடல் அலைஞனின் அலைகள் என்னும் தளத்தில் 'பரந்த-அபத்தலியல்வாதம் (Pan-Absurdism) & பரந்த அபத்தக்கவிதை (Pan-Absurd Poetry): ஓர் அறிமுகம்' என்னும் பெயரிலியின் பதிவில் இடம்பெற்றது.

பெயரிலி அபத்தவாதம் பற்றி எழுதி வைத்திருந்ததை மேலும் கீழும் நக்கலாக சிலவிடயங்களை இட்டு நிரப்பி பிரசுரித்ததும் அதற்குக் கீழே நானும் சிறீரங்கனும் பின்னூட்டமிட்டு மகிழ்ந்ததும் தான் இவ்வுரையாடலில் முக்கியமான விடயங்களாகின. என்னைப் பொறுத்தவரை பெயரிலி சீரியசாக எழுதிய பிரதி ஒருகட்டத்தில் பெயரிலிக்கே வேடிக்கையாகிப் போய்விட அவர் அதை parody தன்மையாகப் பிரசுரம் செய்தது கவனிக்கத்தக்கது. ஆயினும், நாம் அபத்தவியலைப் பற்றிக் கூறக்கிடைத்த சந்தர்ப்பமாகவும் அந்நேரத்தில் மார்க்சியத்தின் கூட்டுமனநிலை பற்றிய விவாதங்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்தமையாலும் அதற்கு முன்னும் பின்னும் அருகேயும் உள்ள விடயங்களைக் கூறக் கிடத்த சந்தர்ப்பமாகவும் பயன்படுத்த எத்தனித்தோம். அந்நேரத்தில் உரையாடலைப் பரவலாகச் சாத்தியமாக்கிவிட வேண்டும் என்ற நிலைப்பாடு எமக்கிருந்த அதே நேரத்தில் எழுத்தாளராக நாம் பரிணமித்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வும் மிகுந்திருந்தது. ஆக, சந்தர்ப்பம் கிடைத்த இடத்தில் எல்லாம் பின்னூட்டம் இட்டு மகிழ்ந்த காலங்கள் அவை. அக்கட்டத்தில் பெயரிலியின் தளம் அதற்கான சிறந்த களமாகவும் எப்போது சச்சரவுகள் நிரம்பிய தளமாகவும் காணப்பட்டது எமது உரையாடலைச் சாத்தியமாக்க உதவக்கூடும் என்ற நம்பிக்கை எமக்கிருந்தது மட்டுமல்லாது பெயரிலி சிலவகையான கலகங்களை செய்துகொண்டிருந்தார். (அதிகாரத்திற்கெதிராகக் கலகம் செய்து கொண்டிருந்த நமது ஈழத்துக் கலகக்காரர்கள் எல்லாம் அப்போது கலகம் முடித்து அதிகாரத்துடன் பாலே நடனம் ஆடிக்கொண்டிருந்தார்கள்.) எமக்கு கலகக்கார வழிகாட்டிகள் எவரும் இருக்கவுமில்லை. parody யுடன் parody அல்லாதவனவும் parody அல்லாதவற்றுடன் parody களும் உரையாடித்தள்ள வேண்டியதன் அவசியம் உங்களுக்குப் புரியாததல்ல.

தமிழ் எழுத்துக்களின் கலகக்குரல்கள் உருவாக்கிய வேற்றுமை பண்புகள் சமூகத்தின் வேறுமாதிரியை உருவாக்கியது. ஒவ்வொரு போக்கிற்கும் எதிரான குரல்கள் கலக்குரல்களாகவே அமைவதுண்டு. அவையே பாத்தியை மறித்து தண்ணீர் மாற்றுவது போல புதிய பாதைகளைத் திறந்து விடுபவை. நிலைப்பட்ட கருத்தியல்களை உடைத்துப் போடுவதற்கு கலகக்காரர்கள் தேவைப்படுகின்றார்கள். கலக்குரல்கள் வெட்டிய பாத்தியில் செல்லும் தண்ணீரை பிரித்து பலபாத்திகளுக்கும் பாய்ச்சுகின்றது. வெட்டிய பாத்தி வழியே கட்டமைக்கப்பட்ட அதிகாரத்தின் மூலம் செழுப்படைந்த பயிர்ப்பிரதேசங்கள் தவிர்த்து வாடிநின்ற பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முற்படுவது கலகக் குரல்களே. எச்சமூகப்போக்கும் அவற்றை மறுத்துவிட முடியாது. ஈழத்துத் தமிழ்ச்சூழலில் சோபாசக்தியின் குரல் அவ்வாறானதொரு குரலே.

இவ்விடத்தில் கூட்டுமனநிலை தொடர்பான பித்தில் தமிழ்மணம் தொடர்பான சமூகம் தன்னை தேக்கிக்கொண்டிருந்தது. அம்மனநிலைக்கு எதிராக தனிமனம் என்பதை நிறுத்த வேண்டிய தேவை எமக்கிருந்தது. இங்கே, நம் கூட்டுமனநிலையை முற்றாக விலக்குபவர்கள் அல்லர். ஆயினும் தனிமனநிலை கருத்தியல் பக்கம் மூடப்பட்டிருந்தது போன்ற உணர்வு எம்மை கூட்டுமனநிலைக்கு எதிராக தனிமனநிலையை முன்வைக்கத் தூண்டியது. தனிமனநிலை ஏற்பின் அல்லது அங்கீகரிபின் பின் ஊட்டுமனநிலைக்கும் தனுமனநிலைக்கும் இடையிலான புள்ளிகளைக் கண்டடைவதே எமது நோக்கமாக இருந்தது. ஆயினும் அதற்கு சிறீரங்கன் எம்மை விடவில்லை. தனிமனநிலையின் பாதகமான அம்சங்களை அவர் எம்முன் வைத்து உரையாடலைத் தொடங்கினார். அவ்விடத்தில் முற்றுமுழுதான நனிநிலை மறுப்பு நிலையை உடைக்க வேண்டிய நிலைப்பாட்டை நாம் எடுக்க வேண்டியதாய்ப் போயிற்று. அவ்வுடைப்பின் பின்னர் அவர் முன்வைத்த காரணிகளை ஏறுக்கொண்டு அடுத்தகட்ட உரையாடலை ஆரம்பிக்க வேண்டிய தேவை தொடர்பாக நாம் ஆவலுடன் இருந்தோம். ஆயினும், இன்றுவரை அது எமக்குச் சாத்தியப்படவே இல்லை என்ற வருத்தம் எமக்கு உண்டு.

சிறீரங்கன் அவர்கள் எமது இன்னூட்டத்தின் ஒருபகுதியைப் பிடித்து தமது உரையாடலைத் தொடங்கிய போதே அதன் ஆரோக்கியமின்மைபற்றி நாம் உணர்ந்திருந்தோம். ஆயினும் கார்ல் பொப்பரின் சாதக அம்சங்களைக் கொண்டு உரையாடலைத் தொடர்ந்தோம். சிறீரங்கன் சொல்வது போன்று கார்ல் பொப்பர் மார்க்சியத்தை கருவறுக்க ஏகாதிபத்தியம் உருவாக்கிய குழந்தை அல்ல. அவரது சிலவகைப்பட்ட கருத்தியலை ஏற்றுக்கொள்ள முடியத சனாதன மார்க்சியர்கள் அவரை மக்கள் விரோதியாகக் கட்டி அழகு பார்த்தார்கள். இன்றைய நவ மார்க்சியர்கள் சிலர் அவரது சாதகமான கருத்துக்களை உள்வாங்கியுள்ளார்கள். ஹெபர்மாசினது கருத்தியலின் அடித்தளத்தில் கார்ல்பொப்பரின் கருத்தியல் இழையோடுவதை உணர்ந்துகொள்ள முடியும். இன்றைய் ஹெபர்மாஸ் கூட மார்க்சியத்தின் அடிப்படைகள் மீது கேள்விகளயும் விமர்சனங்களையும் முன்வைத்தார். ஆயினும், ஹேபர்மாஸ் ஃபிராங்பர்ட் பள்ளியின் சிந்தனை மரபின் தற்போதைய காவலர் என்ற வகையில் சனாதன மார்க்சியர்கள் வாய்பொத்தி மவுனித்து காதுகொடுத்து கேட்டிருக்கின்றனர். இன்று ஹேபர்மாஸ் இருக்கும் இடத்தில் கார்ல் பொப்பர் இருந்திருந்தால் சிலவேளை சனாதன மார்க்சியர்கள் ஆகா மார்க்சியம் அருமை என இன்புற்றிருந்திருக்கக்கூடும் என்பது மார்க்சியர்கள் மீது நாம் காணும் பலமான விமர்சனமாக இருக்கின்றது.

கருத்தியல் தேக்கம் என்பது எப்போதும் எதிரிகளைக் கடமைக்கும். எதிரிகளைக் கட்டமைக்கும் தன்மையின் மூலம் மட்டுமே அவர்களது கருத்தியல் இருப்பு சாத்தியமாகும். அவர்களால் எதிரிகளைக் கட்டமைக்க முடியாமல் போனால் அவர்களது இருப்பு பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் தமது வேலையைச் செவ்வனே செய்கின்றார்கள். ஃபிராங்பர்ட் மார்க்சியப் பள்ளி இருந்திருக்காவிட்டால் மார்க்சியம் என்னும் மானுடநேயத் தத்துவம் என்று சிலவேளை நூலகங்களில் மட்டும் வாழ்ந்துகொண்டிருக்கக் கூடும். பிராங்க்பர்ட் சிந்தனை மரபு கூட விமர்சனமின்றி வளர்ந்த மரபல்ல. அவர்கள் எதிர்கொண்ட விமர்சனங்களும் எண்ணிலடங்காதவை. இன்று, நவமார்க்சியர்கள் அழ்காக இருத்தலியல் மார்க்சியம், அமைப்பியல் மார்க்சியம் பற்றி பேசக்கூடியதாக இருக்கின்றதென்றால் அதற்கான உழைப்பை நாம் மறுத்துவிட முடியாது.

இன்றைய மானுடவியலாளர்கள் கூறும் சமூகப்பிரச்சனை என்பதன் சூழல்தான் அதன் முக்கிய பரப்பு என்பதை இன்றைய தத்துவவாதிகள் இலகுவாக நிராகரித்து வருகின்றார்கள். அதனை எப்போதும் நிராகரிகவே முடியாது. ஒரு பிரச்சனையத் தீர்வு காண்பதற்கு ஐரோப்பிய சூழலில் ஐரோப்பியனால் கண்டுபிடிக்கபடும் கருவி என்பதை நாம் கவனத்துடன் அணுக வேண்டும். அதைக் கேள்விக்கு உட்படுத்த வேண்டும். கீழைத்தேயப் பார்வையை முன்னிறுத்திய எட்வர்ட் சைத் போன்றவர்கள் பெரும்பாலும் கருத்துயல் ரீதியான பார்வைகளை முன்வைத்தாலும், அவை பலதளங்களுக்கும் மிக முக்கியமானவை. வாழ்வின் போக்கு என்பது பலவிதமான் கண்ணிகளை எதிர்கொள்வது. ஒவ்வொரு கண்ணியும் பல்சாத்தியப்பாடுகளுக்கான வெளிவழிகளைக் கொண்டிருக்கும். நாம் தெரிவு செய்த வழி அந்நேரத்தின் மற்றைய வழிகளின் நிரகரிப்புக்கான சாத்தியங்கள் என்பதை நாம் மறுத்துவிட முடியாது. தெரிவுசெய்த வெளிவழியின் பயணத்தின் பின்பு எதிர்கொள்ளும் உதிய கண்ணி என்பது ஏற்கனவே எதிர்கொண்ட கண்ணியின் குழந்தை என்பதை நாம் எப்போதும் ஞாபகம் வைத்திருக்க வேண்டும். இங்கே தான் அறிவியல் கண்டுபிடிப்புகளின் மீது எமது சந்தேகத்தை பலமாக முன்வைக்க வேண்டும்.

மார்க்சியத்தை விஞ்ஞானம் என ஏற்றுக்கொள்வதன் முட்டாள்தனத்தை நாம் இன்றைக்கு உங்களுக்குப் புரிய வைக்கத் தேவை இல்லை. சமூகவியலின் மாற்றத்துடன் தனது மானுடநேயத்தன்மையை மார்க்சியம் மாற்றிக்கொள்ள வேண்டும். நாம் எப்போதும் சமூகவியலுக்கு மேல் கொண்டு போய் விஞானத்தை வைத்து அழகு பார்ப்பவர்கள் அல்லர். சமூகவியலுக்கு மேல் விஞ்ஞானம் அமர்ந்திருந்து அருள்பாலிக்கவும் முடியாது. கூடாது. விஞ்ஞனத்திற்கு மேல் சமூகவியலைப் பொருத்திக் கொள்ளும் போது மட்டுமே மானுடநேயத்துடன் இயங்க முடியும். இன்றைக்கு மானுடவியல் evolutionary anthropology மற்றும் socila anthroplogy என்று பிளவுண்டு கிடக்கின்றது. இவ்விடத்தில் evolutionary anthropology ஐ நாம் social anthroplogy க்கு கீழே கொண்டுபோய் வைக்க வேண்டும். விஞ்ஞானம் 'உண்மைகள்' மிது கட்டப்படுவது. ஆயினும் விஞ்ஞான உண்மைகள் என்பது சமூகத்தின் கட்டமைப்பில் இருந்து உருவாகுபவை. அதை தீர்மானிக்க ஆயிரம் காரணிகள் இருக்கின்றன. இதை நாம் மனதில் வைத்துக் கொண்டால் பலபிரச்சனைக்ளுக்கு இலகுவில் தீர்வு கண்டுவிடலாம். இதை நான் எப்போதும் சிறீரங்கனுக்கு சொல்லவேண்டியிருக்கப் போகின்றது என்பது எனக்கு மகிழ்ச்சி தரக்கூடியவிடயம் அல்ல. மாறாக மிகுந்த கவலையை உருவாக்குவது.

உரையாடல் - 2 இல் சிறீரங்கனுடனான ஊடாட்டம் எனக்கு சந்தோசம் தருவதாக அமையவில்லை. அவரது தனிப்பட்ட சிலநிலைப்பாடுகள் மீது அவரை நாம் ஆதரிக்க முன்வருகின்ற போதிலும் கருத்தியல் மீதான அதீத பிடிப்பு உருவாக்கம் ஒதுக்கும் வெளிகள் மற்றும் மாறாக் கருத்தியல் வன்முறை என்பது ஒப்பீட்டளவில் இராயகரன் அவர்களை விட சில சாதக அம்சங்களைக் கொண்டிருக்கும் போதிலும் பொதுவாகப் பார்க்கும் போது தவறான விடயங்கள் எனவே கூறமுடிகின்றது. இவர்களின் தேக்கம் இவர்களுக்கு பின் வருகின்றவர்களை தேங்கிப் போகச்செய்கின்றது. உதாரணமாக மயூரன் போன்றவர்களின் கருத்துக்கள் இவர்களின் பாதையில் பூத்த செடிகளே. இவர்கள் தவறுவிடும் தருணம் இக்கட்டமே என்பதை இவர்கள் புர்ந்துகொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாது தமிழ்நாட்டில் இருந்து உருவாகும் நூற்றுக்கணகான இளைய அறிவுஜீவிகளுக்கு உல்கத்தில் இன்று எந்த மார்க்சியர்களிடமும் இல்லாத கருத்தியல்களை விதைத்து பிழையான பாதையில் அழிநடத்தப் போகின்றார்கள் என்பதை நினைக்கும் போது மகிழ்ந்திருக்க முடியவில்லை. இவர்கள் கால மார்க்சியத்தை முதலாளித்துவம் தனக்குச் சார்பாக பயன்படுத்தக் கற்றுக்கொண்டுவிட்டது. இவர்களும் அதே மார்க்சிய வாரிசுகளை உருவாக்கும் போது அவர்களும் முதலாளித்துவ அங்கமாக தமது புரட்சியை நடாத்துவர்கள் என்பது நிச்சயம். எழுச்சி பெறக்கூடிய சமூகத்தின் தோல்வி இது என்பதை ஒருவராவது உணர்ந்துகொள்ள வேண்டும் என்ற நம்பிக்கையிலேயே இதனை இங்கே பதிவு செயக்கூடியதாக இருக்கின்றது. சிறீரங்கன் என்கின்ற தனிநபர் மீதான நேசம் எப்போதும் எமக்கு பொங்கிவழிகின்றது இராயகரன் மீதான நேசம் போலவே.

0 comments: