Friday, January 23, 2009

உரையாடல் - 3 (பெயரிலி, அமீபா) - [[மீள்வாசிப்பு]]

இவ்வுரையாடல் அலைஞனின் அலைகள் என்னும் தளத்தில் 'வன்மையாகக் கண்டிக்கிறோம் :-)' என்னும் பதிவில் இடம்பெற்றது.

நாம் ஏற்கனவே கூறியமாதிரி Mainstream ஐ நோக்கி எவ்வித கேள்விகளையும் கேட்டதேயில்லை. எப்போதும் Mainstream மீதும் அதன் தவறான போக்குகள் மீதும் என்றும் மாறாத கடுமையான விமர்சனம் உண்டு. எமது கடுமையான விமர்சனங்களை எப்போதும் நாம் முன்வைத்ததே இல்லை. தாம் போகும் தவறான பாதைகளை என்றைக்குமே Mainstream விளங்கிக் கொண்டதில்லை. இப்பூமியில் அதை விளக்க முற்பட்ட ஒருசிலரை நாம் எப்போதும் மறந்துவிட முடியாது. அவர்கள் இவ்வுலகின் கலகக்காரர்களாக அறியப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் இவ்வுலகின் புரட்சியாளர்களாக அறியப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் இவ்வுலகின் தத்துவாசிரியர்களாக அறியப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் இவ்வுலகின் வழிகாட்டிகளாக அறியப்பட்டிருக்கிறார்கள். அவர்களது போக்கினாலும் செயல்களினாலும் Mainstream தனது பாதையை மாற்றியவாறே நகர்ந்திருக்கின்றது. பாதையை மாற்றியவர்களை நினைவுகூர்வது எம்மை எப்போதும் புதியபாதையை அமைக்கும் செயற்பாட்டில் வீறுகொண்டெழ வைக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம் நண்பர்களே..!

Mainstream க்கு எதிராக குரல்கொடுப்பவர்களை நோக்கி நாம் ஏன் சதா குரல்கொடுக்கின்றோம்? என்ற கேள்விக்கான விடை எப்போதும் எம்மிடம் உண்டு. Mainstream க்கும் அதிகாரத்திற்கும் எதிராகக் குரல்கொடுக்கவும் கேள்வி கேட்கவும் கூப்பாடு போடவும் இன்றைக்கு பல தயாரிப்புக்கள் எம்மிடம் உண்டு. ரஷ்ய தயாரிப்பு, சீன தயாரிப்பு, கியூப தயாரிப்பு, அமெரிக்க தயாரிப்பு, லண்டன் தயாரிப்பு, ஜேர்மனிய தயாரிப்பு, பிரான்சிய தயாரிப்பு, லத்தீன் அமெரிக்க தயாரிப்பு, இந்திய தயாரிப்பு என பலவகையான Brand கள் எம்மிடம் உண்டு.

அவ்வாறே Mainstream க்கு எதிராகக் குரல்கொடுக்க பல காரணங்களும் நம்மிடம் உண்டு. வரலாற்றில் பெயரைப் பதிவு செய்தல், சமூகத்தில் வித்தியாசமானவராக நம்மைக் காட்டிக் கொள்ளுதல், கலகக்காரன் எனப்பெயர் பெறுதல், இவற்றின் மூலம் பெண்களின் மனதில் இடம்பிடித்தலும் மடியின் அடியில் இடம்கேட்டலும், இவ்வாறே கலகக்கார ஆண்களைக் கொள்ளை கொள்ளுதல், இயலுமெனில் கலக்குரலுக்காகப் பணம்பெறுதல் எனப்பலவகையான காரணங்களும் இன்று எம்மிடம் வலுத்துவிட்டது. ஆக, இன்றைய அதிகாரத்திற்கு எதிரான குரல்களும் Mainstream மீதான விமர்சனக்குரலை எதிர்ப்பவர்களும் தமக்கான அறத்துடன் கேள்விகளற்ற தளத்தில் உலாவரத் தொடங்கிவிட்டார்கள். Mainstream இற்கு எதிரான தளம் விம்மிப் பெருத்துவிட்டது. அதுமட்டுமல்லாது அத்தளம் கேள்வி கேட்கப்படக்கூடாத தளமாக தன்னை கட்டமைக்க எத்தனிக்கின்றது. கேள்வி கேட்பவர்களை Mainstream இன் பாதகமான முத்திரையை குத்தி வாயைப்பொத்துவதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இது மிக ஆபத்தான நிலமையாகும். அதற்குள் கலகம் செய்யும் தருணம் வந்துவிட்டதாகவே உணர்கின்றோம்.

Mainstream இன் ஆபத்துக்களை சதா சுட்டிக்காட்டும் அதற்கு எதிரானவர்களாகவும் அதற்கான மாற்றீடுகளை வைத்திருப்பதாகக் கூறிக் கொள்பவர்களும் Mainstream ஐ விட ஆபத்தான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நாம் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இங்கே தாம் நாம் எமது விமர்சனத்தை முன்வைக்க விரும்புகின்றோம். Mainstream க்கு எதிரானவர்களாகத் தம்மைக் காட்டிக் கொள்பவர்கள் எவ்வாறு பிழையான வகையில் சாதாரண மக்களை வழிநடத்த முற்படுகின்றார்கள் என்பதும் அடிப்படைவாதங்களை உற்பத்தி செய்கின்றார்கள் என்பதும் நாம் மிக அவதானமாகப் பரிசீலிக்க வேண்டிய விடயங்கள்.

ரயாகரன் விடயத்தை நாம் கூர்மையாக அவதானிக்க வேண்டியிருக்கின்றது. ரயாகரனை விமர்சிப்பதற்கு முன்னராக ரயாகரன் கட்டமைக்கும் அரசியல் என்னவாக இருக்கின்றது என்பதைக் கவனமாக ஆய்வுசெய்ய வேண்டியுள்ளது. ரயாகரனின் மக்கள் மையமான அரசியல் எப்போதும் விரிவுபெற வேண்டியது. குறுக்கல்களை தன்னுள் அனுமதிக்காமல் வளர்ச்சி பெற வேண்டியது. ஆயினும் ரயாகரனின் அரசியல் கருத்துக்கள் எப்போதாவது அதை அனுமதித்திருக்கின்றதா என்றால் இல்லை என்ற மிகச் சோகமான பதிலே எமக்குக் கிடைக்கின்றது.

பின்னவீன காலம் விளிம்பு அடையாளங்கள் மீதான கரிசனையை வெளிப்படுத்திய போது, அதன் முற்போக்கமான விடயம் சிலசனாதன மார்க்சியர்களைத் தவிர பெரும்பாலான அறிவுஜீவிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆயினும் பிற்காலத்தில் விளிம்பு அடையாளங்கள் அரசியலாக்கப்பட்ட போதும் சரி அரசியல், அடையாளங்களை மீறவிடாமல் மூலதனதிற்காகவும் அதிகாரத்திற்காகவும் அதைக் குறுக்கிய போதும் சரி அதன் பாதகமான அம்சங்கள் அனைவராலும் உணரப்பட்ட தருணங்களை நாம் இன்று காண்கின்றோம். இவ்விடத்திலேயே நவ மார்க்சியர்கள் வர்க்க அடையாளம் என்ற தனி அடையாளம் தவிர்த்தும் பல தளங்களிலுமான சிறுபான்மை அடையாளங்களை முன்னிறுத்துவதை நாம் அவதானிக்கின்றோம். ரயாகரன் போன்ற 'மார்க்சியர்கள்' வர்க்க அடையாள முதன்மைப்படுத்தல்களில் இருந்து எப்போதும் வெளிவந்ததில்லை. அவற்றிற்குப் பல காரணங்கள் உண்டு.

நவ மார்க்சியர்களுக்கு தனியே பொருளாதார அடிப்படையிலான வர்க்க அடையாளத்தில் இருந்து மார்க்சியத்தை மீட்டெடுக்க வேண்டிய தேவை இருந்தது. அவர்கள் எதிர்கொண்ட சூழ்நிலைகள் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தது அவ்வாறான தெரிவை மேற்கோள்ளுமாறே. அதுமட்டுமல்லாது தனி அடையாளம் எப்போதும் அதன் தீவிர தன்மையில் குறுக்கல்களை நோக்கி நகரக்கூடியது. குறுக்கல்கள் எப்போதும் அடிப்படைவாதங்களை மட்டுமே உற்பத்தி செய்பவை. அடிப்படைவாதங்கள் பாசிச மனநிலை கொண்டலையும். இவ்வகையான பாசிச மனநிலையே இன்றைய ரயாகரனது தெரிவாக இருக்கின்றது. தான் நிற்கும் இடத்தை ரயாகரன் சரியாக உணரவில்லை என்பதே சோகம். ஏனெனில் அவரது குரல் மக்களுக்கானது. அவ்விடத்தில் நாம் அவருக்காகக் கவலைப்பட வேண்டியுள்ளது.

ரயாகரனது நிலைப்பாடுகள் போன்றதே இன்றைக்கு வேறுபல மார்க்சியர்களது நிலைப்பாடுகளும். அடிப்படைவாதங்களை வகைதொகையின்றி உற்பத்தி செய்வதை அவர்கள் எப்போதும் கனசச்சிதமாகச் செய்துகொண்டேயிருக்கின்றார்கள். Collective of Identities, சிறுபான்மை வாழ்வுகள், சிறுபான்மை என்னும் பன்மை போன்ற விடயங்களை எப்போதும் உணர்ந்து கொள்ளாது மார்க்சியத்தை வாழவைக்கின்றோம் பேர்வழியென்று மார்க்சியத்திற்கு எதிரிகளைக் கட்டமைப்பதையும் அடிப்படைவாத மனநிலையை வளர்த்துச் செல்பவர்களுமாக நம்முன் பலர் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். சிவசேகரம், நாவலன், ரயாகரன், சிறீரங்கன் போன்றவர்கள் மீது நாம் இவ்விமர்சனத்தை முவைக்க முடியும். (யமுனா ராஜேந்திரனை முற்றுமுழுதாக இவ்வகைக்குள் சேர்க்க முடியாது. மேற்கூறியவர்களிடமிருக்கும் அடிப்படைவாதம் ஒப்பீட்டளவில் ய. ரா விற்கு இருப்பதாகத் தெரியவில்லை. ய.ரா வை நினைக்கும் போது எமக்கு எஸ்.வி.ஆர் உம் ஞாபகத்தில் வந்து போகின்றார்.)

நாம் சொல்லும் இவ்விடயத்திற்கு இவர்களிடமிருந்து வரக்கூடிய பதிலையும் நாமே இவ்விடத்தில் சொல்லிவிடுகின்றோம். 'எஸ்.வி. ஆர் உம் ய.ரா வும் மார்க்சியத்தை சீர்குலைப்பதற்கு ஏகாதிபத்தியவாதிகள் உற்பத்தி செய்த கருத்துக்களின் அடிவருடிகள்' என்பதே ரயாகரனதும் சிவசேகரத்தினதும் நாவலனதும் சிறீரங்கனது பதிலாக இருக்கும் என்ற நம்பிக்கை எமக்கு மிகநிச்சயமாகவே உண்டு. இவ்விடயம் மதவாதிகளது செயற்பாட்டிற்கு ஒப்பானது.

இதற்கான மிகநிச்சயமான காரணம் இவர்கள் மார்க்சியத்தால் கவரப்பட்டு எவ்வாறுதான் வாழ்ந்தாலும் பொருளாதாரச் சிறுபான்மை மக்களது மனநிலையை எப்போது உணர்ந்து கொள்ளாதவர்கள். மார்க்சியத்தின் எதிரிகள் பூர்ஷ்வா வர்க்கத்தில் இருந்தே தோன்றுவார்கள் என்பது எப்போதும் மிகநிச்சயமான உண்மையே. மார்க்சியத்தை பூர்ஷ்வாக்கள் உள்வாங்குவது ஆதரிப்பது என்பது வேறு பூர்ஷ்வாக்கள் கருத்தியல் தளத்தில் அதனைச் செழுமைப்படுத்துவதென்பது வேறு. மேற்படி அனைவரிடமும் எம்மை எதிர்ப்பதற்கு எளிய சமன்பாடு இருக்கும் என்ற நம்பிக்கை எமக்கு நிச்சயமகவே உண்டு. அவர்களது கருத்தியலின் பாதக நிலையை அவர்கள் எப்போதும் அறிந்து கொள்வதில்லை என்பது அதற்கான சூழ்நிலையோ மனநிலையோ அவர்களிடம் இல்லை என்பதும் கேலிக்குரிய விடயம் அல்ல. மாறாக சோகமான விடயம். ஏனெனில் இவர்கள் சிலவிடயங்களை நம்புகின்றார்கள். அதைக் கூறுகிறார்கள். அவ்வளவே. நேரடியாக மக்களுக்கு எதிராக எப்போதும் இயங்காதவர்கள்.

புலிகளது தோல்வி மக்களது வெற்றியல்ல என்ற எளிய அடிப்படையை விளங்கிக் கொள்ள முடியாதவர்களைப் பற்றி அதிகம் பேசுவதென்பது எமக்கு உவப்பானதல்ல என்ற போதிலும் சிலவிடயங்களைப் பதிவு செய்தே ஆகவேண்டியுள்ளது. ரயாகரன் பற்றிய விமர்சனத்தை நாம் செய்து 15 மாதங்கள் ஆகின்றன. ஆனால், இன்றுவரைக்கும் அவர் தனது தரப்பில் இருக்கும் தவறுகளை கொஞ்சமாவது திருத்திக்கொள்ளவுமில்லை.

15 மாதங்களுக்கு முன்னர் நாம் ரயாகரனுக்கு சொன்ன விடயங்களை மீண்டும் திரும்பிப் பார்க்கின்றோம். அதை மீண்டும் மீண்டும் ரயாகரனுக்குச் சொல்ல வேண்டியுள்ளது. அவருக்கு மட்டுமல்லாது அவருடன் சேர்த்து 4 பேருக்கும் சொல்ல வேண்டியுள்ளது.
/ரயாகரன்.
நீங்கள் சுட்டிக்காட்டும் எதிரிகள் பெரும்பாலானோர் உங்கள் மக்களே. நீங்கள் நேசிக்கும் மக்களே. அவர்களை உங்கள் எதிரி என நீங்கள் கட்டமைப்பது எவ்வளவு மோசமானது. ரயாகரன், இன்று இளஞர்களாக இருப்பவர்களுக்கு ஒரே ஒரு இயக்கத்தை மட்டுமே தெரியும். அது தான் புலிகள். அவர்கள் புலிகள் மீதான விமர்சனக்கருத்தைக் கொண்டிருந்தாலும் புலிகளால் மட்டுமே ஏதோவொரு தீர்வைத் தர முடியும் என நம்புகிறார்கள். உங்களது கடைசிப் பதிவு மிகவும் மோசமானது. உங்களை நீங்களே ஒருவிதமான பாசிச மனநிலைக்கு கொண்டு செல்கின்றீர்கள். கருத்தியல் மீதான அதீத பற்று அடிப்படவாத மனநிலையை வளர்த்துச் செல்லும். அதனால் வன்முறையை மட்டுமே சாத்தியமாக்க முடியும். விடுதலையை அல்ல. உலகம் எப்போதுமே அடிப்படைவாத மனநிலைகளுக்குள்ளேயே தன்னைத் திணித்து பல கோடிப்பேர்களைக் கொன்றொழித்துவிட்டது. இயங்கியல் வழி சிந்திப்பவர்களால் எப்போதுமே அடிப்படைவாத மனநிலையில் இருந்து சிந்திக்க முடியாது. சிந்திக்க கூடாது. அது எவகையிலும் ஆரோக்கியமான சமுதாயம் ஒன்றை உருவாக்கிவிட போவதில்லை. எல்லோரையும் இருவிதமான வகைமாதிரிக்குள் அடக்க பார்க்கின்றீர்கள். அது எவ்வளவு கொடுமை தெரியுமா ரயாகரன்?/

சமூகத்தை கணித்தாலோ அல்லது சமன்பாடுகளாலோ எப்போதும் விளங்கிக்கொள்ள முடியாது. அதை அடிக்கடி வலியுறுத்த வேண்டியுள்ளது மிகப்பெரும் சோகமே.
/இராயகரனது சமன்பாடு அவரை புலியை எதிர்க்கும்படி சொல்கின்றது. அதன்படியே அதை அவர் எதிர்க்கின்றார். அவ்வாறே அவரது சமன்பாடு புலியெதிர்ப்புகும்பலை எதிர்க்கும்படி சொல்கின்றது. அதன்படியே அதையும் எதிர்க்கின்றார். இதில் பிரச்சனை என்னவென்றால் அவரது சமன்பாடும் அவர் அச்சமன்பாட்டை நம்பும் விதமும் தான். அச்சமன்பாடு மட்டுமே மக்களை காக்கும் என நம்புகின்றார். ஒருசமன்பாடே வெவ்வேறு சூழ்நிலைகளுக்குள் வாழும் வெவ்வேறு கலாச்சார மக்களுக்கெல்லாம் எல்லா காலங்களிலும் ஒரேவிதமான தீர்வை தரும் என்று 'உண்மையாகவே' நம்புகின்றார். அங்கேதான் பிழை விடுகின்றார். எவ்வாறு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அல்லாவுக்கும் குர்ரானுக்கும் தங்கள் விசுவாசத்தை காடுகின்றார்களோ, இந்து அடிப்படைவாதிகள் மததுக்காக, அப்பாவி இஸ்லாமியர்களை உயிரோடு கொளுத்துகிறார்களோ, ஹிட்லர் எதற்காக யூதர்களை கொன்று குவித்தாரோ, அவ்வாறே வேறொரு தளத்தில் அதற்கு சமாந்தரமான மனவுணர்வுடன் தனது சமன்பாட்டை பூஜிக்கின்றார். செயற்பாட்டு தளம் சமன்பாடுகளை தனது முன்னோக்கிய நகர்வுக்கு மட்டுமே பயன்படுத்தும். சமன்பாட்டுடன் தேங்கிப்போகாது./

0 comments: